Skip to main content

பெண்ணை நீதிமன்ற வளாகத்தில் இழுத்து சென்ற பெற்றோர்... பொதுமக்கள் தடுத்து நிறுத்தியதால் பரபரப்பு!

Published on 13/10/2021 | Edited on 13/10/2021

 

The parents who dragged the girl to the court premises

 

நாகை சார்பதிவாளர் அலுவலகத்தில் சாதி மறுப்பு திருமணம் செய்துகொள்ள வந்த இளம்பெண்ணை, கையெழுத்து போடும்போது சினிமா பாணியில் பெண்ணின்  உறவினர்கள் வந்து இழுத்துச் சென்று காரில் ஏற்றியபோது பொதுமக்கள் மடக்கிப் பிடித்து பெண்ணை மீட்டது பெரும் பரபரப்பை உண்டாக்கியது. புதுக்கோட்டை மாவட்டம் கீரனூர் பகுதியைச் சேர்ந்த பாரதி (23) என்பவரும், நாகை மாவட்டம் செம்பியன்மாதேவி கிராமத்தைச் சேர்ந்த மதன்ராஜ் (24) என்பவரும் திருச்சியில் உள்ள தனியார் மருத்துவமனை ஒன்றில் பணியாற்றிவருகின்றனர். வெவ்வேறு சமூகத்தைச் சேர்ந்தவர்களான இருவருக்கும் ஏற்பட்ட நட்பு காலப்போக்கில் காதலாக மாறி, இரண்டு ஆண்டுகளாக காதலித்துவந்துள்ளனர்.

 

ஒருகட்டத்தில் இருவரின் காதல் விவகாரம் பெண்ணின் வீட்டிற்கு தெரியவர, இருவரது காதலையும் கடுமையாக எதிர்த்துள்ளனர். இந்தநிலையில், இருவரும் பதிவு திருமணம் செய்ய திட்டமிட்டு, கடந்த 9ஆம் தேதி திருச்சியிலிருந்து நாகை வந்து நேற்று (12.10.2021) பதிவு திருமணம் செய்ய திட்டமிட்டு தலைமறைவாக இருந்தனர். நேற்று பதிவுத் திருமணம் செய்வதற்கு முன்பே நாகையில் உள்ள பிரசித்திபெற்ற ஒரு கோவிலில் இருவரும் திருமணம் செய்துகொண்டனர். அதன்பின்னர் வழக்கறிஞர்கள் மூலமாக முறைப்படி பதிவுத் திருமணம் செய்ய நாகை சார்பதிவாளர் அலுவலகத்திற்கு வந்துள்ளனர். இந்த விவகாரம் பெண்வீட்டிற்கு தெரிந்து, பதிவுத் திருமணம் செய்து இறுதியாக கையெழுத்து போடும் நொடிநேரத்தில் நாகை சார்பதிவாளர் அலுவலகத்திற்குள் சினிமா பானியில் நுழைந்த பெண்ணின் உறவினர்கள், பெண்ணை அடித்து வலுக்கட்டாயமாக இழுத்துச் சென்றனர்.

 

இந்தச் சூழலில் சார்பதிவாளர் அலுவலகத்திலேயே இரு தரப்பிற்கும் மோதல் ஏற்பட்டது. ஆனாலும் பெண்ணின் உறவினர்கள் பெண்ணை விடாப்பிடியாக அங்கிருந்து நாகை நீதிமன்ற வளாகத்தின் வழியாக இழுத்துச் சென்றனர். அப்போது அந்தப் பெண்ணின் அலறல் சத்தத்தைக் கேட்டு நீதிமன்ற வலாகத்தில் இருந்த பொதுமக்கள் திரண்டுவந்து அவர்களிடம் கேட்டனர். அவர்கள் பதில் ஏதும் கூறாமல், பெண்ணை காரில் ஏற்றுவதற்கு முயற்சி செய்தனர். அப்போது அங்கிருந்த பொதுமக்கள் காரை மறித்துப் பெண்ணை கீழே இறக்கிவிடும்படி கூச்சலிட்டனர். பெண்ணின் தந்தையோ "நான் ஒரு கிராம நிர்வாக அலுவலர், என்னை யாரும் தடுக்கக் கூடாது," என்றும் அங்கிருந்த பொதுமக்களிடமும், அந்தவழியாக வத்த பெண் காவலர் ஒருவரிடமும் வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.

 

add

 

இந்த விவகாரம் அருகில் இருந்த மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்திற்குத் தெரியவர, அங்கு கூடுதல் போலீசார் அனுப்பப்பட்டு காரை மறித்துப் பெண்ணை மீட்டு நீதிபதியிடம் அழைத்துச் சென்றனர். பாதிக்கப்பட்ட காதலர் மதன்ராஜ், தங்கள் இருவருக்கும் பாதுகாப்பு வழங்கி, தனது மனைவியை மீட்டுத்தர வேண்டும் என்று வெளிப்பாளையம் காவல் நிலையத்தில் புகார் மனு அளித்துள்ளார். நாகையில் நடந்த சாதி மறுப்பு திருமணத்தைத் தடுத்து நிறுத்தி பெண்ணை பெற்றோர்கள் நீதிமன்ற வளாகம், எஸ்.பி. அலுவலகம் அருகிலேயே வலுக்கட்டாயமாக தூக்கிச் செல்ல முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

 

 

சார்ந்த செய்திகள்