விழுப்புரம் மாவட்டம் வானூர் அருகே மஞ்சள் காமாலைக்கு நாட்டு மருந்து சாப்பிட்ட சிறுவன் உயிரிழந்தார். அவரது மரணத்தில் சந்தேகம் இருப்பதாக காவல் நிலையத்தில் அவரது பெற்றோர்கள் புகார் அளித்துள்ளனர்.
விழுப்புரம் மாவட்டம் வானூர் அருகே உள்ள தைலாபுரம் காந்தி நகரைச் சேர்ந்தவர் சக்தி. இவரது மகன் 10 வயது ரோகித் தைலாபுரத்தில் உள்ள அரசு ஆதிதிராவிடர் நல ஆரம்பப் பள்ளியில் 5 ஆம் வகுப்பு படித்து வந்தார். கடந்த சில நாட்களாக திடீரென சிறுவனின் உடல்நிலை பாதிக்கப்பட்டது. பின்னர் மருத்துவ பரிசோதனையில் சிறுவனுக்கு மஞ்சள் காமாலை இருக்கிறது எனத் தெரிய வந்துள்ளது. உடனடியாக சிறுவனின் பெற்றோர் கடந்த 19 ஆம் தேதி விழுப்புரம் அருகே உள்ள கெங்கராம்பாளையத்தைச் சேர்ந்த நாட்டு வைத்தியர் காந்திமதி என்பவரிடம் நாட்டு மருந்து வாங்கிக் கொடுத்துள்ளனர்.
காலை 8 மணிக்கு நாட்டு மருந்து சாப்பிட்டு விட்டு வீட்டுக்குச் சென்ற சிறுவனுக்கு வயிற்று வலி ஏற்பட்டுள்ளது. இதையடுத்து சிறுவனை புதுச்சேரி கதிர்காமம் அரசு குழந்தைகள் மருத்துவமனையில் சிகிச்சைக்காகக் கொண்டு சென்று சேர்த்தனர். அன்றிரவு சிறுவன் பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.
இதனிடையே, நாட்டு மருந்து சாப்பிட்டதால்தான் சிறுவன் உயிரிழந்திருப்பதாகவும், சாவில் சந்தேகம் இருப்பதாகவும் வளவனூர் காவல் நிலையத்தில் சிறுவனது பெற்றோர் புகார் செய்தனர். போலீசார் சந்தேக மரணம் என்ற பிரிவின் கீழ் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மஞ்சள் காமாலைக்கு நாட்டு வைத்தியம், மூலிகை வைத்தியம் மூலம் மட்டுமே குணப்படுத்த முடியும் நிலை உள்ளது. கெங்கராம்பாளையம் பகுதியில் உள்ள நாட்டு மருத்துவரிடம் மஞ்சள் காமாலை நோய் ஏற்பட்டவர்கள் பல்வேறு மாவட்டங்களிலிருந்து அங்கு சென்று நாட்டு மருந்து சாப்பிட்டு குணமாகி உள்ளனர். மேலும் மஞ்சள் காமாலை நோய் முற்றிய நிலையில் சிகிச்சை எடுத்ததினால் சிகிச்சை பலனளிக்காமல் சிறுவன் உயிரிழந்திருக்கலாம், நாட்டு மருந்து சாப்பிட்டதால் இருக்க வாய்ப்பு இல்லை என்கிறார்கள் அப்பகுதி மக்கள்.