தமிழ்நாட்டில் கரோனா முதல் அலை வந்து பள்ளி, கல்லூரிகள் மூடப்பட்டு ஏறக்குறை 8 மாதங்களுக்குப் பிறகு மீண்டும் பள்ளி, கல்லூரிகள் திறக்கப்பட்டன. ஆனால், அதற்குள் கரோனா இரண்டாம் அலை மிகத் தீவிரமாக பரவவே பள்ளி, கல்லூரிகள் மீண்டும் மூடப்பட்டன. அதன்பிற்கு, பல்வேறு கட்டுப்பாடுகள் மற்றும் கரோனா தடுப்பூசி பயன்பாட்டிற்கு வந்தது உள்ளிட்ட காரணங்களால் கரோனா இரண்டாம் அலை கட்டுக்குள் வந்தது. அதனைத் தொடர்ந்து மீண்டும் பள்ளி, கல்லூரிகள் திறக்கப்பட்டன. இதில், பள்ளிகள் 9ஆம் வகுப்பு முதல் 12ஆம் வகுப்பு வரை மட்டுமே தற்போது வரை செயல்பட்டுவருகிறது. இந்த நிலையில், வரும் நவம்பர் 1ஆம் தேதி முதல் 1ஆம் வகுப்பு முதல் 8ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கும் பள்ளிகள் திறக்கப்படுகின்றன.
இந்நிலையில் இன்று (07.10.2021), திருச்சி மாவட்டம், மணப்பாறையில் பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர், “தற்போது பள்ளிக்கு வரும் மாணவ, மாணவிகளின் பெற்றோர்களுக்கு கரோனா தடுப்பூசி செலுத்திக்கொள்ள ஏற்கனவே விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டுள்ள நிலையில், தற்போது கூடுதல் கவனம் செலுத்தி மேலும் விழிப்புணர்வு ஏற்படுத்தப்படும்.
வருகிற 1ஆம் தேதி முதல் 1ஆம் வகுப்பு முதல் 8ஆம் வகுப்பு வரை பள்ளிகள் திறக்கப்பட உள்ள நிலையில், முதல்முறையாக 1ஆம் வகுப்பிற்கு வரும் மாணவ, மாணவிகளுக்கு எப்படி முகக்கவசம் அணிவது என்பதுகூட தெரியாத நிலை இருக்கும். ஆகவே, தடுப்பூசி செலுத்திக்கொண்ட பெற்றோர்கள் தங்களின் பிள்ளைகளைப் பள்ளிக்கு அழைத்து வந்து உடன் இருக்கலாம். குழந்தைகளால் மாஸ்க் போட்டுக்கொண்டு நீண்ட நேரம் உட்கார முடியவில்லை என்கிறபோது, பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளை அழைத்துச் செல்லலாம்” என்று தெரிவித்தார்.