Skip to main content

தபால் மூலம் வெளிநாடுகளுக்கு பார்சல் அனுப்பும் சேவை நிறுத்தம்

Published on 21/03/2020 | Edited on 21/03/2020

கல்வி கற்கவும், பணியாற்றவும், ஏற்றுமதி, இறக்குமதி என தொழில் புரியவும் வெளிநாடுகளில் நமது மக்கள் பலர் உள்ளார்கள் அவர்களுக்கான தேவைப்படும் பொருட்கள் தபால் மூலம் அனுப்பப்படுவது வழக்கம். இப்போது கரோனா வைரஸ் எதிரொலி காரணமாக எல்லாமே அடியோடு நிறுத்தப்பட்டது.

 

 Parcel dispatch service ban

 

ஈரோட்டில் தலைமை தபால் நிலையத்திலிருந்து வெளிநாடுகளுக்கு பார்சல் அனுப்பும் பிரிவு தனியாக செயல்பட்டு வருகிறது. ஐரோப்பிய நாடுகளில் தற்போது கரோனா வைரஸ்  தாக்கம் மிகவும் அதிகரித்துள்ளது. இதனால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக சுமார் 42  ஐரோப்பிய நாடுகளுக்கு பார்சல் அனுப்புவது நிறுத்தப்பட்டு விட்டது.

இது சம்பந்தமாக தபால்நிலைய அதிகாரி ஒருவர் கூறும்போது, ஈரோட்டைச் சேர்ந்த பலர் கல்வி கற்க மாணவ மாணவிகளாக ஐரோப்பிய நாடுகளில் படிக்கின்றனர் . அவர்களுக்கு அத்தியாவசிய தேவையான நம்ம ஊர் அரிசி, பருப்பு , மசாலா பொருட்கள் மற்றும் அவர்களுக்கான உடை, துணிகள் ,போர்வை , பெட்ஷீட் என ஜவுளிகளை மாதம் ஒரு முறை அவர்களது பெற்றோர்கள் தபால் மூலம் அனுப்பி வைப்பார்கள். இதைப்போலவே  ஜவுளி உற்பத்தியாளர்கள், ஜவுளி இடைத்தரகர்கள் தங்களது உற்பத்தியான வேட்டி, சேலை, பெட்ஷீட் என ஜவுளிகளை  சாம்பிளாக அங்குள்ளவர்களுக்கு அனுப்புவார்கள். மாதத்திற்கு ஈரோட்டில் மட்டும் ஐந்து லட்சம் ரூபாய் வரை வெளிநாட்டு பார்சல் பதிவு செய்யப்படும்.

இதில் ரஷ்யா, ஜெர்மனி, இத்தாலி, பிரான்ஸ், ஸ்பெயின், போலாந்து, நார்வே, ஆஸ்திரேலியா உள்ளிட்ட 42 நாடுகளுக்கு ஜெர்மன் நாட்டின் லூப் தான்ஷா என்ற விமானம் மூலம் பார்சல் அனுப்பி வைக்கப்படும். தற்போது கரோனா  வைரஸ் பரவி வருவதால் ஜெர்மனி விமான சேவை முழுமையாக ரத்து செய்துள்ளது. இதனால் ஐரோப்பிய நாடுகளுக்கு பார்சல் அனுப்புவது இந்த ஒருவாரமாக நிறுத்தப்பட்டு விட்டது" என்றார்.
 

வெளிநாட்டில் உள்ள நம் மக்கள் இந்த கரோனா வைரஸ் தாக்கத்தால் நம்ம ஊரிலிருந்து அத்தியாவசிய பொருட்களை பெற முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

 

 

சார்ந்த செய்திகள்