நாடு சும்மா கிடந்தாலும் கிடக்கும் பாழும் நாகரிகம் ஓடி வந்து கெடுக்கும்'- என்று மேடைகளில் ஒலித்த அந்த கிராமத்துக் குரலை மறக்க முடியாது. மதுரை அருகேயுள்ள பரவையைச் சேர்ந்த முனியம்மாவின் நாடோடிப் பாடல்கள் கருத்தும் இனிமையும் நிறைந்தவை. நாட்டுப்புறக் கலைகளை வெகுஜன இயக்கமாக மாற்றிய முற்போக்கு எழுத்தாளர் சங்க மேடைகளில் பரவை முனியம்மா வலம் வரத் தொடங்கியபிறகு, திரைப்பட வாய்ப்புகளும் தேடி வந்தன.
"தூள்' திரைப்படம் மூலம் அனைத்து ரசிகர்களுக்கும் அறிமுகமான பரவை முனியம்மாவின், "சிங்கம் போல நடந்து வாரான் செல்லப் பேராண்டி' பாட்டு எட்டுத்திக்கும் ஒலித்தது. இன்று மீம்ஸ்கள் வரை கலக்கும் பரவை முனியம்மா கடந்த சில நாட்களாகவே உடல்நலன் குன்றியிருந்த நிலையில், ஊரடங்கு அமல்படுத்தியிருக்கும் வேளையில், பிரபல நாட்டுப்புற பாடகியும் நடிகையுமான பரவை முனியம்மா தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றபோது, மூச்சுத் திணறல் ஏற்பட்டு காலமானார்.
பரவை முனியம்மா மறைவு குறித்து தனது முகநூல் பக்கத்தில் அபிசரவணன் பதிவிட்டுள்ளார்.
‘அதிகாலை 2 மணியளவில் பரவை முனியம்மா வீட்டில் இருந்து ஒரு போன். இரண்டு மணிக்கு போன் என்பதால் பயத்துடன் எடுத்தபோது, பரவை முனியம்மா அவர்களுக்கு மூச்சுத்திணறல் இருப்பதாக தகவல் வந்தது.
உடனடியாக அடுத்த போன் அம்மாவின் உயிர் பிரிந்தது என்று தகவல் வந்தது. அதிர்ந்துபோனேன்.. உடைந்து போனேன்.. அப்பத்தாவின் இறுதி மூச்சு பிரிந்ததை அறிந்து இறுக்கத்துடன் கிளம்பினேன் .
ஒரு மாலை கூட வழியில் வாங்க இயலாத கையாலாகாதப் பேரனாய் பரவை முனியம்மா பாட்டியைப் பார்க்கச் சென்றேன். வழியெங்கும் அவரது நினைவுகள்.. "அபி அபி' என்று அழைத்த அந்த ஆறுதலான வார்த்தைகள்..அன்பான சிரிப்பு.. இக்கட்டான சூழ்நிலையில் மருத்துவமனையில் வைத்திருந்த போது கூட, அபி தைரியமாக கோர்ட்டுக்குச் சென்று வா. அப்பாத்தா நான் இருக்கிறேன். எதுவானாலும் பார்க்கலாம்.எல்லாம் நல்லபடியாக நடக்கும் என்று ஆறுதல் அளித்தார்.இன்று அவர் உயிரோடு இல்லை.இடுகாடு வரை இறுதி ஊர்வலம்.. இறுதி மரியாதை..இன்றுடன் எல்லாமே முடிந்தது. என உருக்கமான வார்த்தைகளில் பதிவு செய்துள்ளார்.