பள்ளி குழந்தைகள் மீதான பாலியல் அத்துமீறல்கள் குறித்து தொடர்ந்து புகார்கள் எழுந்துவரும் நிலையில், பரமக்குடியில் பள்ளி மாணவிகள் 15 பேருக்குப் பாலியல் தொல்லை கொடுத்த கணித மற்றும் சமூக அறிவியல் ஆசிரியர்கள் மீது போக்சோ வழக்குப் பதிவுசெய்யப்பட்டுள்ளது.
ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி ஒன்றியத்திற்கு உட்பட்ட அரசுப் பள்ளி ஒன்றில் கடந்த 7ஆம் தேதி பெண்குழந்தை விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. குழந்தைகள் நல அலுவலர் விழிப்புணர்வு வழங்கியபோது 9 மற்றும் 10ஆம் வகுப்பு பயிலும் சிறுமிகள் சிலர் தங்கள் பள்ளி சமூக அறிவியல் ஆசிரியரும், கணித ஆசிரியரும் தங்களுக்குப் பாலியல் தொல்லை கொடுத்ததாகப் புகார் தெரிவித்தனர். வகுப்பறையில் இரட்டை அர்த்தத்தில் பேசுவது, தொடுவது, தவறான நோக்கத்தோடு வீட்டுக்கு வருவது மற்றும் செல்ஃபோனில் ஆபாசமாகப் பேசுவது உள்ளிட்ட செயல்களில் ஈடுபட்டதாக மாணவிகள் சொன்னதை கேட்டு அதிர்ந்த மாவட்ட குழந்தைகள் நல அலுவலர் விசாரணை நடத்தினார். விசாரணையில் பாலியல் குற்றச்சாட்டு உறுதி செய்யப்பட்டது. அதனைத்தொடர்ந்து பரமக்குடியைச் சேர்ந்த கணித ஆசிரியர் ஆல்பர்ட் வளவன் பாபு, விருதுநகர் மாவட்டத்தைச் சேர்ந்த சமூக அறிவியல் ஆசிரியர் ராமராஜன் ஆகியோர் மீது போக்சோ சட்டத்தில் வழக்குப் பதிவுசெய்தனர். சமூக அறிவியல் ஆசிரியர் ராமராஜனை பரமக்குடி மகளிர் போலீசார் கைது செய்த நிலையில், கணித ஆசிரியர் ஆல்பர்ட்டை போலீசார் தீவிரமாகத் தேடிவருகின்றனர்.