கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை அருகே உள்ளது பெரிய ஏரி. அந்த ஏரிக்கரைப் பகுதியில் நேற்று முன்தினம் மாலை அடையாளம் தெரியாத நபர் ஒருவர் கைகள் கட்டப்பட்ட நிலையில் கழுத்து அறுக்கப்பட்ட நிலையில் கொலை செய்யப்பட்டு பிணமாக கிடந்தார். இதுகுறித்து அப்பகுதி மக்கள் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். போலீசார் விரைந்து வந்து அந்த உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
கொடூரமான முறையில் கொலை செய்யப்பட்டு கிடந்தது யார்? என்பது குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தினர். கொலை செய்யப்பட்டவர் கடலூர் மாவட்டம் பண்ருட்டி ரஹ்மத் நகரை சேர்ந்த முகமது பராக் மகன் சதாம் உசேன் (வயது 33) என்பது தெரியவந்தது. மேலும் இவர் பீகார் மாநிலத்தில் இருந்து 10 ஆண்டுகளுக்கு முன்பு பண்ருட்டிக்கு வந்துள்ளார் என்றும் தற்போது பண்ருட்டி ஆர்எஸ் சம்சுதீன் பள்ளிவாசலில் இமாமாக பணி செய்து வருவதாகவும் தெரியவந்துள்ளது.
இவர் கடந்த 13ம் தேதி இரவு முதல் காணவில்லை என அவரது குடும்பத்தினர் தேடி வந்துள்ளனர். இந்த நிலையில்தான் பெரியபட்டு ஏரியில் கொலை செய்யப்பட்டு கிடந்துள்ளார். இவருக்கு ஷல்பாபானு என்ற மனைவியும், இரு மகன்கள், ஒரு மகன் ஆகியோர் உள்ளனர்.
இந்த நிலையில் கள்ளக்குறிச்சி மாவட்ட எஸ்பி கொலை செய்யப்பட்டு கிடந்த இடத்தை நேரடியாகப் பார்வையிட்டார். திருநாவலூர் இன்ஸ்பெக்டர் விஜி தலைமையில் சதாம் உசேனை கொலை செய்த கொலையாளிகள் யார் என்பதைக் கண்டு பிடிப்பதற்காக தனிப்படை அமைக்கப்பட்டு விசாரணை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
இந்த நிலையில் முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சதாம் உசேன் உடல் பிரேத பரிசோதனை முடிந்து நேற்று மாலை அவரது உடலை அவரது உறவினர்களிடம் ஒப்படைக்க ஏற்பாடு செய்யப்பட்டது. ஆனால் கொலையாளிகளை கைது செய்யாத வரை உடலை வாங்க மாட்டோம் என சதாம் உசேனின் உறவினர்கள் மறுத்துள்ளனர். போலீசார் சமாதான பேச்சு நடத்தியும் சமரசம் ஏற்படாமல் உடலை வாங்காமல் சென்றுள்ளனர். தற்போது போலீசார் கொலையாளியை நெருங்கி விட்டதாக கூறுகின்றனர் விரைவில் கொலையாளிகள் யார் எதற்காக சதாம் உசேன் கொலை செய்யப்பட்டார் என்ற உண்மைகள் வெளிவரும் என்கிறது போலீஸ் தரப்பில்.