கடலூர் மாவட்டம் பண்ருட்டி அருகில் உள்ளது வி.ஆண்டி குப்பம். இந்த ஊரைச் சேர்ந்தவர் மஞ்சுளா, வயது 29. இவருக்கு திருமணமாகி மூன்று குழந்தைகள் உள்ளனர். கணவருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக மஞ்சுளா தனியாக வீடு எடுத்து வசித்து வருகிறார். இப்படிப்பட்ட நிலையில் மஞ்சுளாவுக்கும் பண்ருட்டி மளிகை கடையில் வேலை பார்த்து வரும் பணிக்கன் குப்பம் கிராமத்தை சேர்ந்த 34 வயது கண்ணதாசன் என்பவருக்கும் பழக்கம் ஏற்பட்டு அது பின்னர் கள்ளக்காதலாக மாறியுள்ளது. இருவரும் திருமணம் செய்து கொள்ளாமலேயே வி. ஆண்டி குப்பம் பகுதியில் கணவன் மனைவி போல குடும்பம் நடத்தி வந்தனர்.
இந்த நிலையில் கடந்த 12ஆம் தேதி மளிகை கடைக்கு வேலைக்கு சென்ற கண்ணதாசன் மீண்டும் வீடு திரும்பவில்லை. இதையடுத்து மஞ்சுளா பண்ருட்டி காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார். மளிகை கடைக்கு வேலைக்கு சென்ற அண்ணாதுரையை பனிரண்டாம் தேதி முதல் காணவில்லை. அவரை கண்டுபிடித்து தருமாறு புகாரில் கூறியிருந்தார். இவரது புகாரின் மீது வழக்குப்பதிவு செய்த பண்ருட்டி போலீசார் தீவிர விசாரணை நடத்தி வந்தனர்.
அந்த விசாரணையைத் தொடர்ந்து கண்ணதாசன், மஞ்சுளா ஆகிய இருவரும் பயன்படுத்திவந்த செல்போன் எண்ணை போலீசார் கண்டறிந்து அதை வைத்து புலனாய்வு செய்தனர். அப்போது மஞ்சுளா தனது செல்போன் மூலம் பலரிடம் பேசி வந்தது தெரியவந்தது. மேலும் வேணுகோபால சாமி கோயில் அர்ச்சகர் கோபிநாத்திடம் மஞ்சுளா அடிக்கடி செல்போனில் பேசியதை கண்டுபிடித்த போலீசார் சந்தேகம் அடைந்தனர்.
போலீசார் விசாரணையை தீவிரப்படுத்தினார்கள். இந்த விசாரணையின் மூலம் பல்வேறு தகவல்கள் வெளிவந்து போலீசாரையே திடுக்கிட வைத்துள்ளது. இதுகுறித்து போலீசார் விசாரணை செய்ததில், மஞ்சுளா அதே ஊரில் உள்ள வேணுகோபால சுவாமி கோவில் அர்ச்சகராக பணி செய்து வரும் அர்ச்சகர் (58 வயது) கோபிநாத் என்பவர் வீட்டில் வீட்டு வேலை பார்த்து வந்துள்ளார். அர்ச்சகர் வீட்டில் வேலை முடித்துவிட்டு வீட்டுக்கு வந்தபிறகும் அர்ச்சகர் கோபிநாத்துடன் அடிக்கடி செல்போனில் பேசி வந்துள்ளார். இதை மஞ்சுளாவின் கள்ளக்காதலர் கண்ணதாசன் கண்டித்துள்ளார்.
இருப்பினும் மஞ்சுளா. அர்ச்சகர் கோபிநாத்துடன் செல்போனில் பேசுவதை வாடிக்கையாக கொண்டிருந்துள்ளார். இதனால் மஞ்சுளாவுக்கு அர்ச்சகர் கோபிநாத்துக்கு இருவருக்கும் இடையில் தவறான தொடர்பு இருக்கலாம் என்று கண்ணதாசனுக்கு சந்தேகம் ஏற்பட்டது. ஆத்திரமடைந்த கண்ணதாசன் சமீபத்தில் ஒரு நாள் அர்ச்சகர் கோபிநாத் வீட்டுக்கேசென்று அவரையும் அவரது குடும்பத்தினரையும் திட்டியுள்ளார். என்னுடன் மனைவி போல இருக்கும் மஞ்சுளாவை தெய்வத்திற்கு பூஜை செய்யும் அர்ச்சகர் கள்ளக்காதலியாக வைத்துள்ளது முறையா? இது அந்த தெய்வத்தை அடுக்குமா? என்று சண்டை போட்டு வந்துள்ளார்.
தனக்கும் மஞ்சுளாவுக்கும் உள்ள தொடர்பை பலர் பார்க்கும்படி பகிரங்கமாகப் பேசி அம்பலப்படுத்தி அவமானப்படுத்தி தனது இமேஜுக்கு களங்கம் ஏற்படுத்தி விட்டதாக கண்ணதாசன் மீது கடும்கோபம் ஏற்பட்டுள்ளது அர்ச்சகர் கோபிநாத்துக்கு, இதேபோன்று மஞ்சுளாவும் கோபமடைந்துள்ளார். இதையடுத்து அர்ச்சகரும் மஞ்சுளாவும், கண்ணதாசனை தீர்த்துக்கட்ட முடிவு செய்தனர். இதற்கு ஒரு முடிவு கட்ட முடிவெடுத்த அர்ச்சகர் கோபிநாத், கோபமாக இருந்த கண்ணதாசனை கடந்த 17ஆம் தேதி சமாதானப்படுத்துவதற்காக வேணுகோபாலசாமி கோவிலுக்கு பவ்வியமாக பேசி வர வழைத்துள்ளார்.
அப்போது அங்கிருந்த மஞ்சுளா மற்றும் அவருடன் இருந்தவர்கள் சிலர் சேர்ந்து இரும்பு கம்பியால் கண்ணதாசனை திட்டமிட்டு ஆயுதங்களுடன் சரமாரியாக தாக்கியுள்ளனர். அடி பொறுக்க முடியாமல் கண்ணதாசன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார். அவரை கொலை செய்த பின்னர் கண்ணதாசன் உடலை வெளியில் எங்காவது கொண்டு மறைக்க முயன்றால் அது வெளியே தெரிந்துவிடும் என்று முடிவுசெய்த அர்ச்சகர் கோபிநாத் மற்றும் மஞ்சுளா, வேணுகோபால சுவாமி கோவிலில் உள்ள பூஜை பொருட்கள் வைக்கப்படும் அறையில் ஒரு பெரிய பள்ளம் தோண்ட முடிவு செய்தனர். கண்ணதாசனின் உடலை அதற்குள் போட்டு யாருக்கும் சந்தேகம் வராத அளவில் புதைத்து அதன்மீது டைல்ஸ் படித்து தரையை பளபளப்பாக்கி உள்ளனர்.
இவையெல்லாம் நடந்து முடிந்த பிறகு மஞ்சுளா போலீசில் கண்ணதாசனை காணவில்லை என்று புகார் செய்து நாடகமாடி உள்ளார். மஞ்சுளா செல்போனை ஆய்வு செய்த பின்னர் நடந்த விசாரணையில்தான் இதனை அவர் ஒப்புக்கொண்டார். இதையடுத்து போலீசார் அவர்கள் இருவரையும் கைது செய்துள்ளனர். மேலும் இந்த கொலை சம்பவத்தில் தொடர்புடைய சிலரையும் போலீசார் தேடி வருகின்றனர்.
இதற்கிடையே நேற்று முன்தினம் நள்ளிரவு ஒரு மணியளவில் வேணுகோபால சுவாமி கோவில் பூஜை பொருட்கள் வைக்கப்படும் அறையில் புதைக்கப்பட்டிருந்த கண்ணதாசன் உடலை தாசில்தார் உதயகுமார் முன்னிலையில் தோண்டி எடுத்துள்ளனர். பின்னர் கண்ணதாசன் உடலை கைப்பற்றிய போலீசார் பிரேத பரிசோதனைக்காக முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.
கண்ணதாசன் கொலை செய்வதற்கு முன்னதாகவே கோவிலில் உள்ள உள்ள பூஜை பொருட்களை வைக்கும் அறையில் ஒரு ஆள் படுக்கக்கூடிய அளவிற்கு பள்ளம் தோண்டப்பட்டுள்ளது அந்த பள்ளம் தோண்டுவதற்கு வந்த தொழிலாளர்கள் சிலர், அர்ச்சகர் கோபிநாத்திடம் ஏன் கோவிலுக்குள் பள்ளம் வெட்டுகிறீர்கள் என்று கேட்டுள்ளனர். அதற்கு அர்ச்சகர் கோபிநாத் இந்த பள்ளத்தில் விக்கிரகம் வைத்து மூடிவிட்டால் பண்ருட்டி பகுதியில் கரோனா தொற்று பரவாது படிப்படியாக கரோனா குறையும், அதற்காகத்தான் தொழிலாளர்களை வைத்து பள்ளம் தோண்டுவதாக பொதுமக்களிடம் கூறியுள்ளார்.
அர்ச்சகர் கோபிநாத் திட்டமிட்டபடி கோவிலுக்குள் தோண்டப்பட்ட பள்ளத்தில் யாருக்கும் தெரியாமல் இரவு நேரத்தில் கண்ணதாசன் உடலை அதற்குள் வைத்து அந்த பள்ளம் வெளியே தெரியாத அளவிற்கு டைல்ஸ் போட்டு மூடி பளபளப்பாக மாற்றியுள்ளனர். இவ்வளவு கனக் கச்சிதமாக கண்ணதாசனை கொலை செய்து அவரை தான் அர்ச்சனை செய்யும் கோயில் வளாகத்திலுள்ள அறையிலேயே பள்ளம் தோண்டி புதைத்துள்ள அர்ச்சகரின் கோபிநாத்தின் செயலைப் பார்த்து பொதுமக்கள் விக்கித்துப் போய் உள்ளனர். அர்ச்சகர் கள்ளக்காதலில் ஈடுபட்டு, கொலை செய்யும் அளவிற்கு துணிந்து செயல்பட்டுள்ள சம்பவம் கடலூர் மாவட்டம் மக்கள் மத்தியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.