
திருப்பதி லட்டில் மாட்டுக் கொழுப்பு உள்ளிட்ட பொருட்கள் சேர்க்கப்பட்டிருப்பது குறித்து வெளியான தகவல் பக்தர்கள் மத்தியில் அதிர்ச்சியையும், அதிர்வலையையும் ஏற்படுத்தியுள்ளது.
திருப்பதி லட்டு சர்ச்சைக்கு நடுவே பழனி பஞ்சாமிர்தம் குறித்தும் சில வதந்திகள் பரவியது. திருப்பதி தேவஸ்தானத்திற்கு லட்டு தயாரிக்க நெய் விநியோகம் செய்து வந்த திண்டுக்கல்லை சேர்ந்த ஏஆர் டெய்ரி ஃபுட் நிறுவனத்தில் அதிகாரிகள் சோதனை செய்து வரும் நிலையில், அதே டெய்ரியில் இருந்து பழனி முருகன் கோவிலுக்கும் பஞ்சாமிர்தம் தயாரிக்க நெய் வாங்குவதாக சந்தேகம் இருப்பதாக தமிழக பாஜகவின் நிர்வாகியான வினோஜ் பி செல்வம், செல்வகுமார் ஆகியோர் சமூக வலைத்தள பக்கங்களில் பதிவு ஒன்றை வெளியிட்டு இருந்தனர்.
அதற்கு பதிலளித்த தமிழக அரசின் இந்து அறநிலையத்துறை, ஆவின் நிறுவனத்திடம் இருந்து பஞ்சாமிர்தம் தயாரிக்க நெய் வாங்கப்படுவதாக தெரிவித்து பஞ்சாமிர்தம் குறித்த வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்தது. இந்நிலையில் திரைப்பட இயக்குநர் மோகன் ஜி பஞ்சாமிர்தம் குறித்துப் பகிர்ந்த சில விஷயங்கள் சர்ச்சையை ஏற்படுத்த இன்று காலை கைது செய்யப்பட்ட அவர், மாலை ஜாமீனில் விடுவிக்கப்பட்டுள்ளார்.

இந்நிலையில் பழனி பஞ்சாமிர்தம் குறித்து வலைத்தள பக்கத்தில் தவறாக பரப்பிய பாஜக நிர்வாகி வினோஜ் பி செல்வம் மற்றும் செல்வகுமார் ஆகியோர் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என திருச்சி மாவட்டம் வயலூர் முருகன் கோவிலின் செயல் அலுவலர் அருண்பாண்டியன் சோமரசம்பேட்டை போலீசாரில் புகார் அளித்துள்ளார். ஏற்கனவே பாஜக நிர்வாகி வினோஜ் பி செல்வம் மற்றும் செல்வகுமார் மீது இதே விவகாரம் தொடர்பாக அறநிலையத்துறையும் போலீசில் புகாரளித்துள்ளது குறிப்பிடத்தக்கது.