ஈரோடு மாவட்டம் பெருந்துறை தொகுதியில் செயல்படுத்தப்படும் கொடிவேரி கூட்டுக் குடிநீர் திட்டத்தில் விடுபட்ட ஊராட்சிகளையும் இணைக்க வேண்டும் என முன்னாள் அமைச்சர் தோப்பு வெங்கடாசலம் கோரிக்கை விடுத்துள்ளார்.
இதுகுறித்து ஈரோடு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஆட்சியர் ஹெச்.கிருஷ்ணனுண்ணியிடம் அவர் வெள்ளிக்கிழமை மனு கொடுத்தார், பிறகு அவர் கூறும்போது, "பெருந்துறை தொகுதிக்கான கொடிவேரி கூட்டுக் குடிநீர் திட்டம் ரூபாய்.234 கோடி செலவில் மேற்கொண்டு சென்ற இரண்டு மாதங்களுக்கு முன்பு தமிழக முதல்வர் அவர்கள் துவக்கி வைத்தார். மூன்று ஊராட்சி ஒன்றியங்கள், எட்டு பேரூராட்சி பொதுமக்கள் பயனடையும்படி இத்திட்டம் வடிவமைக்கப்பட்டது.
தற்போது சென்னிமலை ஊராட்சி ஒன்றியம் ஈங்கூர், வாய்ப்பாடி, வரப்பாளையம், கூத்தம்பாளையம், சிறுகளஞ்சி, பனியம்பள்ளி ஆகிய ஊராட்சிகள் இதில் விடுபட்டுள்ளன. அவற்றை இணைத்து குடிநீர் வழங்க வேண்டும். இப்பகுதியில் சிப்காட் தொழிற்சாலைகளின் ஆலைக் கழிவால் நிலத்தடி நீர் பாதிக்கப்பட்டு, கால்நடைகள் கூட அந்த தண்ணீரை குடிக்க முடியவில்லை. ஆகவே மக்களின் குடிநீர் பிரச்சனையை கவனத்தில் கொண்டு விடுபட்ட ஊராட்சிகளுக்கும் குடிநீர் இணைத்து வழங்க வேண்டும்.
அத்திக்கடவு-அவினாசி திட்டத்தில் சென்னிமலை பகுதியில் 60க்கும் மேற்பட்ட குளங்கள் இணைக்காமல் உள்ளதையும் இணைக்க வேண்டும். பெருந்துறை தினசரி காய்கறி சந்தை வளாகத்தில் இரண்டு தளமாக காய்கறிச் சந்தைக்கு கடை அமைத்தால் விவசாயிகள், வியாபாரிகள், பொதுமக்கள், சுமைப்பணியாளர்கள் சென்று வருவது சிரமம். எனவே தரைதளத்தில் மட்டும் கடைகள் அமைக்க வேண்டும்." என்றார்.