விழுப்புரம் மாவட்டம் கானை ஊராட்சி ஒன்றியம் கொசப்பாளையம் கிராமத்தில் ஊரக வளர்ச்சித் துறை அமைச்சர் ஐ.பெரியசாமி, அமைச்சர் பொன்முடி ஆகியோர் கலந்துகொண்டு மரக்கன்று நடும் விழா நடைபெற்றது.
இந்த விழாவின் போது சம்பந்தப்பட்ட கொசப்பாளையம் ஊராட்சி மன்றத் தலைவராக இருக்கும் பிரகாஷுக்கு உரிய மரியாதை அளிக்காமல் விழா நடைபெற்றதாகவும், அந்த விழாவில் திமுகவினர் மற்றும் அரசு அதிகாரிகள் ஊராட்சி மன்றத் தலைவரை அவமானப்படுத்தி விட்டதாகவும், அதையும் மீறி கூட்டத்திற்குச் சென்றபோது உள்ளே விடாமல் திமுகவினர் அவரை தள்ளிவிட்டதாகவும் கூறி ஊராட்சி மன்றத் தலைவர் பிரகாஷ் ஊரில் உள்ள பொதுமக்களுக்கு குடிநீர் வழங்கும் மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டி மீது ஏறி அமர்ந்துகொண்டு உண்ணாவிரதம் மேற்கொண்டார்.
இவரது உண்ணாவிரதப் போராட்டம் குறித்த தகவல் அறிந்த கஞ்சனூர் போலீசார் மற்றும் உள்ளூர் திமுக பிரமுகர்கள் ஊராட்சி மன்றத் தலைவரிடம் சென்று பேசி சமாதானம் செய்தனர். அவர்களின் சமாதானத்தை ஏற்றுக்கொண்டு பிரகாஷ் தனது போராட்டத்தைக் கைவிட்டு கீழே இறங்கி வந்தார். தனது ஊரில் நடைபெற்ற நிகழ்ச்சியில் ஊராட்சித் தலைவரான தன்னை அவமானப்படுத்தியதாகக் கூறி அந்த ஊராட்சித் தலைவர் நடத்திய போராட்டம் அப்பகுதி மக்கள் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.