புவனகிரி அருகே ஊராட்சியில், ஊராட்சி செயலர் நிதி முறைகேடு செய்தது தொடர்பாகப் புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்காத பீ.டி.ஓ., வை கண்டித்து ஊராட்சி மன்றத் தலைவர் தீக்குளிக்க முயன்றது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கடலூர் மாவட்டம், மேல்புவனகிரி ஒன்றியம், தெற்குத்திட்டை ஊராட்சியில் தலைவராக ராஜேஸ்வரி, துணைத் தலைவராக மோகன்ராஜ், ஊராட்சி செயலராக சசிக்குமார் நிர்வாகத்தில் உள்ளனர். ஊராட்சியில் நிதி முறைகேட்டை தடுக்கவும், வெளிப்படைத் தன்மைக்காக பல்வேறு மாற்றங்களை அரசு மேற்கொண்டுள்ளது. இதில் செலவினங்களுக்கு தலைவர் மற்றும் துணைத் தலைவர் செல்போனுக்கு வரும் ஓ.டீ.பி., எண் மூலம் நிதி ஒதுக்கீட்டு உறுதி செய்து வருகின்றனர். அந்த வகையில் இந்த ஊராட்சியில் சமீபத்தில் ஊராட்சி செயலர் தன்னிச்சையாக குறிப்பிட்ட தொகையை முறைகேடு செய்துள்ளதாக ஊராட்சித் தலைவர் ராஜேஸ்வரி கேட்டதால் தலைவர் மற்றும் செயலருக்குள் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.
இருவரும் ஒருமையில் பேசிக்கொண்டு ஆவேசமாகத் திட்டிக் கொண்டுள்ளனர். இதில் தன்னை ‘செருப்பால் அடிப்பேன் என ஊராட்சி செயலர் திட்டியது குறித்தும் உரிய நடவடிக்கை எடுக்கவும், முறைகேடு செய்த பணத்தை மீட்டு ஊராட்சி கணக்கில் வரவு வைக்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் குறித்து வட்டார வளர்ச்சி அலுவலரிடம் புகார் அளித்துள்ளார்.
மனுவைப் பெற்ற அதிகாரி நடவடிக்கை எடுக்கவில்லை எனவும் தன்னை அலட்சியம் செய்வதை கண்டித்தும், சம்பந்தப்பட்ட செயலரை பணியிடை நீக்கம் செய்ய வேண்டும் என வெள்ளிக்கிழமை ஊராட்சி மன்றத் தலைவர் ராஜேஸ்வரி ஒன்றிய அலுவலகத்தில் பெட்ரோல் ஊற்றி தீக்குளிக்க முயன்றார். இதனால் அதிர்ச்சி அடைந்த அங்கிருந்தவர்கள் பெட்ரோல் பாட்டிலை பிடுங்கி சமரசம் செய்தனர். இதனால் அப்பகுதி மிகுந்த பரபரப்பாகக் காணப்பட்டது.
இதுகுறித்து புவனகிரி வட்டார வளர்ச்சி அலுவலர் முருகன், வெள்ளிக்கிழமைதான் இவர்கள் அலுவலகத்திற்கு வந்து மனு புகார் கூறினார்கள். இதனை எழுத்துப்பூர்வமாக எழுதிக் கொடுங்கள் எனக் கூறினேன், பின்னர் விசாரணை மேற்கொண்டு நடவடிக்கை எடுப்பதாக கூறப்பட்டது. உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறி இதுபோன்று நடந்து கொண்டார். உடனடியாக அவரை சமாதானம் செய்து அனுப்பி வைக்கப்பட்டது. ஊராட்சி செயலாளர் தவறு ஏதும் செய்யவில்லை என்றும் 2 பில் ஊராட்சி தலைவரின் அனுமதியோடுதான் போட்டதாகக் கூறுகிறார். மேலும் விசாரணையில்தான் தெரிய வரும் என்றார்.