நடந்து முடிந்த 9 மாவட்டங்களின் ஊராட்சி, ஒன்றிய பகுதியில் வெற்றி பெற்ற உறுப்பினர்கள் பதவி ஏற்று வரும் நிலையில், இரண்டு பெண் உறுப்பினர்கள் தங்களின் பதவியை ராஜினாமா செய்வதாகக் கடிதம் கொடுத்திருப்பது பரபரப்பைக் கிளப்பியுள்ளது.
தூத்துக்குடி மாவட்டம், சாத்தான்குளம் யூனியனுக்குட்பட்ட தாமரைமொழி பஞ்சாயத்தில் 6 உறுப்பினர்கள் ஒன்றரை ஆண்டுகளாகப் பணியாற்றி வருகின்றனர். இந்த பஞ்சாயத்தில் 3 குடிநீர் மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டிகள் இருந்தும் மக்களுக்கு குடிநீர் முறையாக வழங்கப்படவில்லை என அப்பகுதியின் 3ம் வார்டு சுயம்புகனி மற்றும் 4ம் வார்டு உமா ஆகிய உறுப்பினர்கள் குற்றம் சாட்டி வந்திருக்கிறார்கள்.
குடிநீர் பிரச்சனை தொடர்பாக ஊராட்சித் தலைவர் மற்றும் அதிகாரிகளுக்குத் தெரியப்படுத்தியும் நடவடிக்கை எடுக்கவில்லை. வாக்களித்த மக்களுக்கு எங்களால் பதிலளிக்க முடியவில்லை. கடும் குடிநீர் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. எனவே எங்களின் உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்கிறோம் என சாத்தான்குளம் யூனியன் ஆணையாளர் பாண்டியராஜிடம் தங்களின் ராஜினாமா கடிதத்தை அளித்துள்ளனர். ஆணையாளரும் அந்த ஊராட்சியில் குடிநீர் பிரச்சனையைத் தீர்ப்பதாகவும் விரைவில் நடவடிக்கை எடுப்பதாகவும் தெரிவித்து அவர்களை அனுப்பிவைத்தார்.
ஆணையாளரான பாண்டியராஜ், “பஞ். உறுப்பினர்களின் ராஜினாமா என்றால் அதனை உரிய வகையில் ஊராட்சிமன்றக் கூட்டத்தில் வைத்து விவாதித்து தீர்மானம் நிறைவேற்றி மனுவை அளிக்க வேண்டும். குடிநீர் பிரச்சனை காரணமாக இந்த முடிவு எடுத்துள்ளனர். ஊராட்சிக்கு கூட்டுக் குடிநீர் திட்டம் மூலம் குடிநீர் சப்ளை செய்யப்பட்டு வருகிறது. கூடுதலாக மக்களுக்கு குடிநீர் வழங்கிட நடவடிக்கை எடுக்கப்படும்” என்று தெரிவித்துள்ளார்.
உறுப்பினர்களின் இந்த ராஜினாமா பரபரப்புக்காகவும் நடத்தப்பட்டது என்கிற மற்றொரு தகவலும் இங்கே பரவி வருகிறது.