திருமணம் செய்வதாகக் கூறி பெண்ணை கர்ப்பமாக்கிய பஞ்சாயத்து கிளர்க்; நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு
காஞ்சிபுரம் மாவட்டம் வாலாஜாபாத் அடுத்த பூசிவாக்கம் மேட்டு தெரு பகுதியைச் சேர்ந்தவர் மணி. இவரது மகன் ராம்குமார்(30) தற்போது காஞ்சிபுரம் மாவட்டம் சாலவாக்கம் அடுத்த பொற்பந்தல் பகுதியில் ஊராட்சி செயலாளராக பணியாற்றி வருகிறார். இவர் வாலாஜாபாத் அருகே உள்ள தென்னேரி பகுதியைச் சேர்ந்த 30 வயது மதிக்கத்தக்க இளம் பெண் ஒருவரது வீட்டிற்கு அடிக்கடி சென்று வருவார். அப்போது ராம்குமார் அந்த பெண்ணிடம் செல்போனில் பேசி உன்னைக் காதலிப்பதாகவும், திருமணம் செய்து கொள்வதாகவும் ஆசை வார்த்தை கூறி சினிமா, கடற்கரை, போன்ற பல இடங்களுக்குச் சென்று அடிக்கடி தனிமையிலிருந்துள்ளார். இந்த நிலையில் அந்த பெண் கர்ப்பமடைந்துள்ளார். ஆனால் அந்த பெண்ணை ராம்குமார் திருமணம் செய்துகொள்ளாமல் ஏமாற்றியுள்ளார்.
இந்த நிலையில் கடந்த 2017 ஆம் ஆண்டு பாதிக்கப்பட்ட பெண், காஞ்சிபுரம் அனைத்து மகளிர் காவல்நிலையத்தில் ராம்குமார் மீது புகார் அளித்தார். இது தொடர்பான வழக்கு செங்கல்பட்டு மகிளா நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த நிலையில் அனைத்து விசாரணைகளும் முடிந்து நேற்று தீர்ப்பு வழங்கப்பட்டது. அதில், ராம்குமார் மீது குற்றம் சுமத்தப்பட்டது உறுதி செய்யப்பட்டதால் அவருக்கு 7 ஆண்டுகள் சிறைத் தண்டனையும், ரூ.6000 அபராதமும் விதித்து நீதிபதி எழிலரசி உத்தரவிட்டார். மேலும் பாதிக்கப்பட்ட பெண்ணிற்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும் எனவும் உத்தரவிட்டார்.