திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் வர்த்தக மையத்தில் மத்திய வர்த்தக இயக்குனரகம் சார்பாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்த தோல் மற்றும் தோல் காலணி பொருட்கள் ஏற்றுமதியாளருக்கான கருத்தரங்கம் பிப்ரவரி 12 ந்தேதி இரவு நடைபெற்றது.
இந்த கருத்தரங்கில் திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் சிவனருள், வெளிநாட்டு வர்த்தக இயக்குனராக துணை இயக்குனர் சுகன்யா, மாவட்ட தொழில் வளமையம் இயக்குனர் தயாளன் உள்ளிட்ட தோல் தொழில் முனைவோர்கள், தொழில் அதிபர்கள் உள்ளிட்ட நூற்றுக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.
கருத்தரங்கில் பேசிய தொழில் அதிபர்கள் சிலர், தோல் தொழில் முனைவர்கள் ஆம்பூர் மற்றும் வாணியம்பாடி பகுதிகளில் தோல் காலணி மற்றும் தோல் வர்த்தகம் அரசு உதவியுடன் சிறப்பாக செயல்பட்டு வருகிறது. கடந்த காலங்களில் இந்திய அளவில் ஒப்பிடும் போது, 60 சதவீதம் ஏற்றுமதி நமது மாவட்டத்தில் இருந்து செய்யப்பட்டது. தற்போது அது 36 சதவீதமாக குறைந்து விட்டது.
அதற்கு காரணம் கான்பூர் உள்ளிட்ட நாட்டின் இதர பகுதியில் நடைபெற்று வரும் தோல் தொழிற்சாலைகளுக்கு அருகிலேயே இரயில் மற்றும் விமான போக்குவரத்து வசதியினை அப்பகுதி வணிகர்கர்களுக்கு அந்த மாநில அரசின் சார்பில் செய்து கொடுத்து ஊக்குவித்து உள்ளனர். ஆம்பூர், வாணியம்பாடி பகுதியில் தங்குவதற்கு கூட நல்ல விடுதிகள் உள்ளிட்ட கட்டமைப்பு வசதியின்றி உள்ளதாகவும் வணிகர்கள் வேதனை தெரிவித்தனர்.
மேலும், ஆம்பூர் பகுதிகளில் வர்த்தகத்தை ஊக்குவிக்கும் வகையில் ஆம்பூர் துத்திப்பட்டு சாலையை மேம்படுத்த வேண்டும் எனவும் மாதம் தோரும் பராமரிப்பு பணிக்காக நாள் முழுவதும் மின் துண்டிப்பு இருக்கிறது. இதனால் அந்த ஒரு குறிப்பிட்ட நாளில் மட்டும் தங்கள் மின் தேவைக்காக நான்கு மடங்கு செலவிட வேண்டியுள்ளதாகவும் தெரிவித்தனர்.
ஊழியர்களுக்கான சம்பளம் உள்ளிட்ட அனைத்து வர்த்தகத்தையும் வங்கி சேவையுடன் இணைக்க மத்திய அரசு வற்புறுத்துகிறது. தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகளில் தங்களால் தங்கள் ஊழியர்களுக்கு வங்கி கணக்கினை துவங்க முடியாத நிலையுள்ளது. தனியார் வங்கிகளில் கணக்கை துவங்க முயன்றால், மாதம் 20 ஆயிரத்துக்கும் மேல் சம்பளம் வாங்கும் ஊழியர்களுக்கு மட்டுமே முன்னுரிமை தருகின்றனர். இதனால் ஊழியர்களுக்கான வங்கி கணக்கினை தொழில் நிறுவனங்கள் தொடங்க முடியாத நிலை உள்ளதாகவும் கருத்தரங்கில் தோல் வணிகர்கள் தெரிவித்தனர்.
ஆம்பூர் தோல் வர்த்தக சபை தலைவர் ஹாகில் அகமது பேசும்பொழுது ஆம்பூர் பகுதிகளில் தோல் வணிகத்தை விஸ்தரிப்பு செய்ய போதிய இடம் இல்லை எனவும் இப்பகுதிகளில் பாலாற்று விவசாயத்தை நம்பி விவசாயிகள் இருந்த நிலையில் பாலாற்றில் தண்ணீர் வரத்து இல்லாததால் இப்பகுதியில் உள்ள ஏழைக் குடும்பங்களின் வாழ்வாதாரத்தை தோல் வணிகமே பூர்த்தி செய்து வருகிறது. இப்பகுதியில் வசிக்கும் ஏழை குடும்பங்களை சேர்ந்த 85 சதவீத பெண்கள் இப்பகுதியில் தோல் காலனி தொழிற்சாலைகளில் பணி புரிகின்றனர்.
இதனால் இவர்களது வாழ்வாதாரம் மேம்பட தோல் காலனி சாலைகளை விஸ்தரிப்பு செய்ய போதிய நிலம் இப்பகுதியில் இல்லை, அதனால் மாவட்டத்தில் பிற பகுதிகளில் மாவட்ட நிர்வாகம் சார்பில் 50 அல்லது 100 ஏக்கர் நிலம் ஏற்பாடு செய்து கொடுத்தால் மேலும் தொழிற்சாலைகளை உருவாக்கி மாவட்டத்தில் வேலைவாய்ப்புகளை உருவாக்க முடியும். தோல் கழிவுகள் பாலாற்றில் கொட்டப்படுவதில்லை எனவும் தோல் கழிவுநீர் பாலாற்றில் விடப்படுவதில்லை எனவும் தோல் கழிவு நீர் சுத்திகரிப்பு மையத்தால் ஜீரோ வாட்டர் வெளியேற்றம் என்ற நிலையை தாங்கள் எட்டி செயல்படுவதாகவும் இருப்பினும் பத்திரிகை மற்றும் ஊடகங்களில் பாலாற்றில் தோல் தொழிற்சாலைகள் கழிவு நீரை விடுவதாக தொடர்ந்து மோசமாக சித்தரித்து வருவதாகவும் குற்றம் சாட்டினார்.
மாவட்ட ஆட்சியர் சிவன் அருள் பேசும்போது, விரைவில் வணிகர்கள் கூறிய அனைத்து பிரச்சினைகள் குறித்தும் சம்பந்தப்பட்ட துறைகளிடம் விவாதித்து தீர்க்கப்படும் எனவும் உறுதியளித்தார் .கழிவு நீர் பாலாற்றில் கலப்பது குறித்து பேசிய மாவட்ட ஆட்சியர் தோல் தொழிற்சாலைகளில் இருந்து வெளியேறும் கழிவுநீர் பாலாற்றில் கலப்பதாக அவ்வப்போது குற்றச்சாட்டுகள் தொடர்ந்து எழுதுவதாகவும் இதுகுறித்து புகார்கள் வருவதாகவும் சில தோல் தொழிற்சாலைகள் சுய ஒழுக்கமின்றி இது போல செயலில் ஈடுபடுவதாகவும் குறிப்பிட்டார்.