தமிழ்நாடு சட்டப்பேரவையில் இந்த ஆண்டிற்கான முதல் கூட்டத்தொடர் நேற்று முன்தினம் (09.01.2023) ஆளுநர் உரையுடன் தொடங்கியது. இந்தப் பேரவை கூட்டத்தொடர் வரும் 13 ஆம் தேதி வரை நடைபெறும் என அலுவல் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது. நேற்று முன்தினம் நடைபெற்ற நிகழ்வில் அரசு கொடுத்திருந்த உரையில் சில வார்த்தைகள் ஆளுநரால் தவிர்க்கப்பட்டது சர்ச்சையை ஏற்படுத்தியது. மேலும் தமிழ்நாடு முதல்வர் உரையாற்றிக் கொண்டிருக்கும் பொழுதே ஆளுநர் சட்டமன்றத்திலிருந்து வெளியேறியதும் சர்ச்சையானது.
இந்நிலையில் தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என். ரவிக்கு எதிர்ப்பு தெரிவித்து, திண்டுக்கல் மாவட்டம் பழனியில் செயல்பட்டு வரும் அருள்மிகு பழனியாண்டவர் கலை மற்றும் பண்பாட்டுக் கல்லூரி மாணவர்கள் கல்லூரி முன்பு, திமுக பழனி நகர மாணவரணி அமைப்பாளர் பிரேம் தலைமையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் கல்லூரி மாணவர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டு ஆளுநரைக் கண்டித்து கண்டனக் குரல் எழுப்பினார்கள். ஆர்ப்பாட்டத்தில் தமிழ்நாடு பெயரை உச்சரிக்க மறுக்கும் ஆளுநர் ரவி தமிழ்நாட்டை விட்டு வெளியேற வேண்டும் என ஆளுநருக்கு எதிராக முழக்கங்களை எழுப்பியும், பதாகைகளை ஏந்தியும் மாணவர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
இதனைத் தொடர்ந்து போலீசார் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட மாணவர்களைச் சமாதானம் செய்து ஆர்ப்பாட்டத்தைக் கைவிடக் கூறினர்.