தமிழக அனைத்து விவசாயிகள் சங்கங்களின் ஒருங்கிணைப்புக்குழு தலைவர் பி.ஆர்.பாண்டியன் வெளியிட்டுள்ள அறிக்கையில், திருவள்ளூர் மாவட்டம் தாமரைப்பாக்கம் அகரம் கண்டிகை கிராமத்தைச் சேர்ந்த க.கார்த்திக் என்ற விவசாயி கடந்த 13-ம் தேதி காலையில் தன் நிலத்தில் விளைந்த காய்கறிகளைச் சந்தையில் விற்பனை செய்வதற்காகத் தனது இரு சக்கரவாகனம் மூலம் கொண்டு செல்லும் போது திருவள்ளூர் மாவட்டம் வெங்கல் காவல் நிலைய ஆய்வாளர் ஜெயவேலு தாமரைப்பாக்கம் கூட்ரோடு அருகே கார்த்தியை வழிமறித்து காய்கறியுடன் வாகனத்தைக் கைப்பற்றி உடன் இருந்த உதவி ஆய்வாளர் சுரேஷிடம் ஒப்படைத்து விட்டு வேறு பகுதிக்குச் சென்று விட்டார்.
வாகனத்தைக் கொடுக்காமல் 3 மணி நேரம் காக்க வைத்துள்ளனர். காய்கறிகள் பூ அனைத்தும் வீணாகிவிடும் எனக் கெஞ்சியும் மனமிறங்காத காவல்துறையினர் அராஜக செயலில் ஈடுபட்டுள்ளனர்.
இதனால் மனமுடைந்த விவசாயி கார்த்தி காய்கறிகளைச் சாலையில் வீசி தனது எதிர்ப்பை வெளிப்படுத்திய நேரத்தில் எதிர்பாராத விதமாக திருவள்ளூர் மாவட்ட சிறப்பு டிஎஸ்பி வளர்மதி சம்பவ இடத்திற்கு வந்து சம்பவத்தைக் கேட்டறிந்த விட்டு ஆய்வாளர் வந்து வாகனத்தை விடுவிப்பார் என்று சொல்லி தனது பொருப்பைத் தட்டிக் கழித்துச் சென்று விட்டார்.
சிறிது நேரம் கழித்து மீண்டும் சம்பவ இடத்திற்கு வந்த ஆய்வாளர் ஜெயவேலு மற்றும் காவலர்கள் சிலரோடு விவசாயி கார்த்தியை அடித்து துன்புறுத்தி ஜீப்பில் ஏற்றி காவல் நிலையத்திற்கு கொண்டு சென்று பின்னர் விடுவித்துள்ளனர்.
இச்செயல் வன்மையாகக் கண்டிக்கத்தக்கது. இது குறித்து இணையதளங்களில் பதிவிட்டதை அறிந்த மாவட்ட காவல் கண்கானிப்பாளர் அரவிந்தன் IPS அவர்கள் பாதிக்கப்பட்ட விவசாயி கார்த்தியைத் தனது அலுவலகத்திற்கு நேரில் அழைத்து வருத்தம் தெரிவித்ததோடு உரிய துறை நடவடிக்கை மேற்க்கொள்வதாக உறுதியளித்திருப்பது ஆறுதல் அளிக்கிறது.
உலகமே பேராபத்தில் தள்ளப்பட்டுள்ள நிலையில் மற்றவர்களுக்கு உணவளிக்க வேண்டும் என்ற உயரிய நோக்கோடு விவசாயிகள் தனது இரத்த வியர்வை சிந்தி உழைத்து வருகின்றனர்.
உயிர்க் கொல்லி தொற்று நோயான கரோனாவை எதிர்த்து மக்களைப் பாதுகாக்க தமிழக அரசோடு இணைந்து தனது உயிரைப் பணையம் வைத்து காவல்துறை மனித நேயத்தோடு செயல்பட்டு வரும் நிலையில் உயர் பொறுப்பு உள்ள வளர்மதி போன்ற ஒரு சிலரின் பொருப்பற்ற செயலை வன்மையாகக் கண்டிக்கிறேன். காவல் ஆய்வாளர் ஜெயவேலு, சுரேஷ் போன்றவர்களின் அநாகரிக நடவடிக்கையால் காவல் துறையில் கரும்புள்ளி ஏற்படுவது வருத்தமளிக்கிறது. எதிர்காலத்தில் இது போல் மனித நேயமற்ற செயல் நடைபெறா வண்ணம் தமிழக அரசு உரிய துறை நடவடிக்கை எடுக்க வலியுறுத்துகிறேன். இவ்வாறு கூறியுள்ளார்.