முன்னாள் மத்திய அமைச்சரும், காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவருமான ப.சிதம்பரத்தின் உறவினர் சிவமூர்த்தி என்பவர் கடத்தப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளார். இது சம்மந்தமாக 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
ப.சிதம்பரத்தின் மனைவி நளினி சிதம்பரத்தின் தங்கை மருமகன் சிவமூர்த்தி. திருப்பூர் ஊத்துக்குளி சாலை கருமாரம்பாளையம் பகுதியில் பனியன் ஆலை நடத்தி வரும் அவர் கடந்த 25ஆம் தேதி காலை அலுவலகத்திற்கு செல்வதாக கூறி தனது வால்வோ காரை எடுத்துக்கொண்டு சென்றுள்ளார். பின்னர் மதியத்திற்கு மேல் அவரது செல்போன் அனைத்து வைக்கப்பட்டதாக கூறப்படுகிறது. இதுகுறித்து திருப்பூர் மாநகர காவல்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. திருப்பூர் காவல்நிலைய போலீசார் தீவிர விசாரணை நடத்தினர்.
இதுதொடர்பாக 3 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தினர். விசாரணையில், சிவமூர்த்தியை கொலை செய்து கிருஷ்ணகிரி மாவட்டம் கெலவரப்பள்ளி அணையில் வீசியதாக 3 பேரும் வாக்குமூலம் அளித்தனர். இதையடுத்து அங்கு விரைந்த போலீசார், கெலவரப்பள்ளி அணையில் இருந்து சிவமூர்த்தியின் உடலை மீட்டனர்.
ஆம்பூர் அருகே தேசிய நெடுஞ்சாலையில் ஒரு சொகுசு கார் நின்றது. அப்போது ரோந்து வந்த போலீசார் அந்த காரை நெருங்கினர். போலீஸ் வாகனம் நெருங்கியதும், சொகுசு கார் பறந்தது. பின்தொடர்ந்த போலீசார் காரை மடக்கினர். காரில் இருந்த 3 பேரை விசாரித்துள்ளனர். அப்போது சந்தேகம் அடைந்த போலீசார் தீவிர விசாரணையில் ஈடுபட்டபோதுதான், சிவமூர்த்தியை கடத்தி கொலை செய்யப்பட்டது தெரிய வந்தது. இதையடுத்து விமல், கவுதமன், மணிபாரதி ஆகிய 3 பேரையும் போலீசார் கைது செய்தனர்.