இந்தியாவில் சில மாநிலங்களில் மீண்டும் கரோனா பாதிப்பு அதிகரிக்க தொடங்கியுள்ளது. அதேபோல் ஒமிக்ரான் குறித்த அச்சமும் தீவிரமடைந்துள்ளது. இந்தியாவில் தற்போதுவரை 269 பேருக்கு ஒமிக்ரான் பாதிப்பு உறுதியாகியுள்ளது. இந்நிலையில், கரோனா பரவல் மற்றும் ஒமிக்ரான் அச்சம் ஆகியவற்றின் காரணமாக இந்தியாவின் சில மாநிலங்களிலும், நகரங்களிலும் புதிய கட்டுப்பாடுகள் அமலுக்கு வந்துள்ளன. கிறிஸ்துமஸ் மற்றும் ஆங்கில புத்தாண்டையொட்டியும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.
இந்தியாவில் ஒமிக்ரான் தொற்று எண்ணிக்கை 300 ஐ தொட இருக்கும் நிலையில் அடுத்தகட்ட நடவடிக்கைகள் குறித்து பிரதமர் மோடி ஆலோசனை நடத்தினார். தடுப்பூசி போடும் பணிகளை தீவிரப்படுத்துவது, தொற்று பரவலை தடுக்க எடுக்க வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து இந்த ஆலோசனைக்கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது.
இந்த ஆலோசனைக் கூட்டத்தின் பிறகு பல்வேறு அறிவுறுத்தல்களை பிரதமர் மோடி வழங்கியுள்ளார். சுகாதார கட்டமைப்பை வலுப்படுத்துவதை அதிகாரிகள் உறுதி செய்ய வேண்டும். மாநிலங்களுக்கு உதவும் வகையில் மத்திய அரசின் உயர்மட்ட குழுவை அனுப்ப வேண்டும். மருத்துவ ஆக்சிஜன் படுக்கை வசதிகள், போதிய மருந்துகள் இருப்பு உள்ளதை உறுதி செய்ய வேண்டும். கரோனா பரவல் அதிகமுள்ள பகுதிகளில் பரிசோதனைகளைத் தீவிரப்படுத்த வேண்டும். மாநிலங்களில் நோய்த்தொற்று நிலவரங்களை நோய்த் தடுப்பு குழு கண்காணிக்க வேண்டும். கரோனா தடுப்பு நடவடிக்கைகளை கண்காணித்து ஆய்வு கூட்டத்தையும் நடத்த வேண்டும். அனைத்து மாநிலங்களும் 100 சதவீத தடுப்பூசி என்ற இலக்கை அடைய வேண்டும் எனத் தெரிவித்துள்ளார்.