திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் பகுதியில் கட்டப்பட்டு வரும் மேம்பால பணியில் சென்ட்ரிங் இடிந்து விழுந்து விபத்துக்குள்ளாகியது. இதில் 5 பேர் காயமடைந்துள்ளதாக முதற்கட்ட தகவல்கள் வெளியாகியுள்ளது.
திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் பகுதியில் சென்னை-பெங்களூர் தேசிய நெடுஞ்சாலையைப் பகுதி இணைக்கக் கூடிய மேம்பால கட்டுமானம் பணிகள் கடந்த இரண்டு வருடங்களாக நடைபெற்று வருகிறது. பணிகள் முடியும் தருவாயில் உள்ளது. இரவு பகலாக வடமாநில தொழிலாளர்கள் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். ஆம்பூர் ரயில் நிலையம் பகுதியில் இருக்கக்கூடிய சான்றோர் குப்பம் முதல் ஹவுசிங் போர்டு வரையிலான சுமார் 2 கிலோ மீட்டர் தூரத்திற்கு மேம்பாலம் அமைக்கும் சென்ட்ரிங் பணி நடைபெற்று வருகிறது.
இந்தநிலையில் சென்ட்ரிங் சரிந்து விழுந்ததில் பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்த ஐந்துக்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் விபத்தில் சிக்கி உள்ளனர். நான்குக்கும் மேற்பட்ட இளைஞர்கள் அங்கிருந்த பொதுமக்கள் மற்றும் காவல் துறையால் மீட்கப்பட்ட நிலையில் இடர்பாடுகளில் ஒருவர் சிக்கி இருக்கிறார் என்று கூறப்படுகிறது. தற்போது அவர்களை மீட்கும் பணி நடைபெற்று வருகிறது. காயமடைந்தவர்களை உடனடியாக ஆம்பூர் காவல்துறையினர் அவர்களுடைய வாகனங்களிலேயே ஆம்பூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுப்பி வைத்துள்ளனர். இந்த சம்பவத்தால் அந்த பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.