கரோனா வைரஸால் கடுமையாகப் பாதிக்கப்பட்ட நோயாளிகளுக்கு ரெம்டெசிவிர் மருந்து பரிந்துரைக்கப்படுகிறது. அந்த மருந்தின் விற்பனையை சென்னையிலுள்ள நேரு உள்விளையாட்டு அரங்கில் இன்று (15.05.2021) தமிழக அரசு துவக்கிய நிலையில், அதனை வாங்குவதற்காக மக்கள் கூட்டம் அலைமோதுகிறது. மருந்து கிடைக்காமல் அவதிபடுகின்றனர்.
கரோனா இரண்டாவது அலை வேகமாகப் பரவிவருவதால் அதனைக் கட்டுப்படுத்த ஸ்டாலின் தலைமையிலான தமிழக அரசு போர்க்கால நடவடிக்கைகளை எடுத்துவருகிறது. இருப்பின் அதன் தீவிரம் கட்டுப்படுத்த முடியாததால் இறப்புகளின் எண்ணிக்கையும் அதிகரிக்கத் துவங்கியுள்ளது. இந்த நிலையில், கரோனாவால் கடுமையாக தாக்கப்பட்டவர்களுக்கு ரெம்டெசிவிர் மருந்து போடப்படுகிறது. அந்த மருந்து தனியார் மருத்துவமனைகளில் இல்லை. மருந்து சீட் எழுதிக் கொடுத்து வாங்கி வரச் சொல்கின்றன தனியார் மருத்துவமனைகள்.
தமிழக மருத்துவப் பணிகள் கழகத்தின் சார்பில் கீழ்ப்பாக்கம் மருத்துவமனை கல்லூரி வளாகத்தில் ரெம்டெசிவிர் மருந்து விற்கப்பட்டுவந்தது. வெளியூரிலிருந்தும் மக்கள் சென்னைக்குப் படையெடுத்ததால், மருத்துவக் கல்லூரியில் இடநெருக்கடி ஏற்பட்டது. இதனைக் கருத்தில்கொண்டு ரெம்டெசிவிர் விற்பனை மையத்தை நேரு உள்விளையாட்டு அரங்கிற்கு மாற்றியது அரசு.
அதன் விற்பனை இன்று (15.05.2021) துவக்கப்படுவதாக அறிவிக்கப்பட்ட நிலையில், ரெம்டெசிவிர் மருந்தை வாங்க, ஆயிரக்கணக்கானோர் அரங்கத்தில் குவிந்தனர். ஒருநாளைக்கு 300 நபர்களுக்கு மட்டுமே வழங்கப்படும் என்று சொல்லப்பட்டதால் கூட்டம் முண்டியடித்துக்கொண்டு அலைமோதியது. அனைவரும் முகக்கவசம் அணிந்திருந்தாலும், தனிமனித இடைவெளி என்பது சிறிதும் இல்லை. மக்களின் கூட்டம் அலைமோதியதால் தள்ளுமுள்ளுகள் ஏற்பட்டன. அவர்களைக் கட்டுப்படுத்த காவல்துறையினர் தடுமாறினர்.
இந்த நிலையில், பல்வேறு இடங்களில் மருந்து விற்பனை மையத்தை துவக்க தமிழக அரசு நடவடிக்கை எடுத்துவருகிறது. இதற்கிடையே, ரெம்டெசிவிர் மருந்து கள்ளச்சந்தையில் கூடுதல் விலைக்கு விற்கப்படுவதை அறிந்த முதல்வர் ஸ்டாலின், கள்ளச்சந்தையில் மருந்து விற்பவர்கள் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்படுவார்கள் என்று தெரிவித்திருக்கிறார்.