ஒரே கிராமத்தைச் சேர்ந்த 30-க்கும் மேற்பட்ட குழந்தைகள் மஞ்சள் காமாலை பாதிப்பு ஏற்பட்டுள்ளது ராஜதானிகோட்டை கிராம மக்களிடையே பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.
திண்டுக்கல் மாவட்டம் கொடைரோடு அடுத்துள்ளது அம்மையநாயக்கனூர் ஊராட்சி. இந்த ஊராட்சிக்கு உட்பட்ட ராஜதானிகோட்டை என்னும் கிராமத்தில் சுமார் 30க்கும் மேற்பட்ட குழந்தைகளுக்கு மஞ்சள் காமாலை தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
சுமார் ஆயிரத்துக்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வரும் ராஜதானிகோட்டையில் பெரும்பாலாக அனைவரும் விவசாய கூலிகளாக உள்ளனர். இந்நிலையில் குறிப்பாக தொடக்கப் பள்ளியில் படிக்கும் 30-க்கும் மேற்பட்ட குழந்தைகள் மயங்கியதோடு சோர்வுடன் காணப்பட்டுள்ளனர். உடனடியாக தனியார் மற்றும் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தபொழுது 30க்கும் மேற்பட்ட குழந்தைகளுக்கு மஞ்சள் காமாலை இருப்பது உறுதியாகி உள்ளது.
சுகாதாரமற்ற தண்ணீரால் மஞ்சள் காமாலை பரவியுள்ளதாக அந்தப் பகுதி கிராமமக்கள் குற்றச்சாட்டை வைக்கின்றனர். பாதிக்கப்பட்டவர்களில் சிலர் அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளிலும் சிலர் நாட்டு வைத்திய முறைப்படியும் சிகிச்சை மேற்கொண்டு வருகின்றனர். உடனடியாக அரசு முகாம் அமைத்து மஞ்சள் காமாலை பரவலைக் கட்டுப்படுத்த வேண்டும் என்றும் அந்த பகுதி மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.