Skip to main content

''எங்களது முழுப்பணி கரோனா தடுப்பு மட்டுமே''- முதல்வர் ஸ்டாலின் பேச்சு 

Published on 21/05/2021 | Edited on 21/05/2021

 

stalin

 

திருச்சி என்.ஐ.டி வளாகத்தில் கரோனா சிகிச்சை மையத்தை திறந்து வைத்த முதலமைச்சர் ஸ்டாலின் அங்கு செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் பேசுகையில், ''தமிழ்நாடு முதலமைச்சராக பதவியேற்ற பிறகு வேறு எந்த பணிகளுக்கு முக்கியத்துவம் கொடுக்காமல், கரோனா தடுப்பு பணிகளுக்கு மட்டுமே முக்கியத்துவம் கொடுத்து செயல்பட்டு வருகிறோம். இதற்காக 14 மாவட்டங்களுக்கு 22 அமைச்சர்கள் கொண்ட குழு அமைத்து பணிகள் முடுக்கி விடப்பட்டுள்ளது.

 

சட்டமன்ற அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகளை கொண்டு குழு அமைக்கப்பட்டுள்ளது. இந்த குழு நாளை கூடுகிறது. ஊரடங்கை நீட்டிப்பதா, அப்படி நீட்டித்தால் என்னென்ன சலுகைகள் வழங்குவது, எவ்விதமான கட்டுப்பாடு விதிப்பது என்பது குறித்து ஆலோசித்து முடிவு செய்யப்படும். இதுதொடர்பாக மருத்துவ வல்லுநர் குழுவினருடனும் ஆலோசிக்கப்படும்.

 

கரோனா நிவாரண நிதியில் 22 கோடி ரூபாய் மருத்துவ உபகரணங்கள் வாங்கவும், 25 கோடி ரூபாய் மூலம் ஆக்சிஜன் கொண்டு வருவதற்கான கண்டைனர் உள்ளிட்ட உபகரணங்கள் வாங்கப்பட்டுள்ளது.

 

இந்த ஆட்சி பொறுப்பேற்றவுடன் இந்த புதிய சவாலை சந்திக்க வேண்டிய கட்டாயம் அரசுக்கு ஏற்பட்டுள்ளது. இந்த சவாலை ஏற்று தமிழக மக்களின் உயிரை காக்க பணி செய்து வருகிறோம். தற்போது தினசரி கரோனா பாதிப்பு 36 ஆயிரமாக உள்ளது. அண்டை மாநிலங்களில் தினசரி பாதிப்பு எண்ணிக்கை 50,000 என்ற நிலையில் உள்ளது.
 

ஊரடங்கு, தடுப்பு பணிகள், கட்டுப்பாடு போன்றவற்றால் தமிழகத்தில் பாதிப்பு எண்ணிக்கை குறைந்துள்ளது. எனினும் வருங்காலங்களில் கரோனா பாதிப்பு உச்சம் தொடும் என்று வல்லுனர்கள் எச்சரித்துள்ளனர். அதனால் அனைவரும் கரோனா தொடர்பான அறிவுரைகளை பின்பற்ற வேண்டும்.

 

stalin

 

இந்த ஆட்சிப் பொறுப்பை ஏற்று இரண்டு வாரங்கள் தான் ஆகிறது. அதற்குள் 16 ஆயிரத்து 938 படுக்கைகள் புதிதாக அமைக்கப்பட்டுள்ளது. ஆக்சிஜன் இணைப்புடன் கூடிய 7 ஆயிரத்து 800 படுக்கைகள் உருவாக்கப்பட்டுள்ளது. 30 இயற்கை மருத்துவ மையங்கள் உருவாக்கப்பட்டுள்ளது. 239 மெட்ரிக் டன் ஆக்சிஜன் கொள்முதல் செய்யப்பட்டுள்ளது. இதர மாநிலங்களிலிருந்து 308 மெட்ரிக் டன் ஆக்ஸிஜன் வாங்கப்பட்டுள்ளது. 1.7 லட்சம் கரோனா பரிசோதனை தினமும் செய்யப்படுகிறது. 2,500 மருத்துவர்கள், 6 ஆயிரம் செவிலியர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.

 

எங்களது முழு பணி கரோனா தடுப்பு பணியில் மட்டுமே உள்ளது. அனைத்து அமைச்சர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள், அதிகாரிகள் என போர்க்கால அடிப்படையில் இந்த அரசு இயங்குகிறது. ஆட்சிக்கு வந்த மகிழ்ச்சியை விட, கரோனா இல்லாமல் செய்வது தான் உண்மையான மகிழ்ச்சியாக இருக்கும். அனைவருக்கும் நெகட்டிவ் என்று வந்த பின்பு தான் எங்களுக்கு முழு மகிழ்ச்சி.

 

அனைவரும் முக கவசம் அணிய வேண்டும், கிருமிநாசினி பயன்படுத்த வேண்டும். தடுப்பூசி செலுத்திக் கொள்ள வேண்டும். நம்மையும் காத்து நாட்டு மக்களையும் காப்போம் என உறுதி ஏற்க வேண்டும். கருப்பு பூஞ்சை நோய் தமிழகத்தில் 9 பேருக்கு உள்ளது. இதற்கான மருந்து கைவசம் உள்ளது.

 

ஊரடங்கு அமல்படுத்தப்பட்ட பின்னர் பல்வேறு சலுகைகள் அறிவிக்கப்பட்டுள்ளது. காலை 6 மணி முதல் 12 மணி வரை கடைகள் திறக்க அனுமதி வழங்கப்பட்டது. பின்னர் அதிக அளவில் கூட்டம் கூடியதால் இது 10 மணி வரை குறைக்கப்பட்டது.

 

சென்னை உள்ளிட்ட ஒரு சில மாவட்டங்களில் கட்டுக்குள் வந்துவிட்டது. ஆனால் கோவை போன்ற நகரங்களில் கட்டுப்பாட்டுக்குள் வரவில்லை. இதற்கு காரணம் கேரளா, கர்நாடகா போன்ற மாநிலங்களில் சேர்ந்த தொழிலாளர்கள் வேலைக்கு வருவதால் இங்கு அந்த நிலை நீடிக்கிறது. எனினும் இங்கும் கட்டுக்குள் கொண்டுவர தொழில் அதிபர்களை அழைத்து பேசியுள்ளோம். விரைவில் அங்கும் கட்டுப்பாட்டுக்குள் வரும்.

 

stalin

 

மறைந்த முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி பிறந்தநாளை முன்னிட்டு ஜூன் 3ஆம் தேதி 4,000 ரூபாய் வழங்கப்படும் என்று தேர்தல் வாக்குறுதியில் அறிவிக்கப்பட்டு இருந்தது. ஆனால் முன்கூட்டியே கரோனா பாதிப்பு ஏற்பட்டதால் கரோனா நிவாரண நிதியாக அந்த திட்டம் அறிவிக்கப்பட்டது. அதில் முதல் தவணையாக இரண்டாயிரம் ரூபாய் வழங்கப்பட்டுள்ளது. மீதமுள்ள இரண்டாயிரம் ரூபாய் ஜூன் 3ம் தேதிக்குள் வழங்கப்பட்டுவிடும்.

 

மத்திய அரசுக்கும் தற்போது பிரச்சினை உள்ளது. நாங்கள் கேட்கும் உதவிகளை செய்வதற்காக ரயில்வே துறை அமைச்சரை நியமனம் செய்து உள்ளனர். அவரை எந்த நேரத்தில் வேண்டுமானாலும் தொடர்புகொண்டு உதவிகளை பெற முடிகிறது. தடுப்பூசி குறித்து கிராமங்களிலும் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் மக்கள் இயக்கமாக நடத்தப்படும்.

 

சென்னை ராஜீவ்காந்தி மருத்துவமனையில் கரோனா நோயாளிகள் ஆம்புலன்சில் காத்திருக்கும் நிலையை குறைக்க சிறப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. நாங்கள் ஆட்சிக்கு வந்த போது ராஜீவ்காந்தி மருத்துவமனை வாயிலில் 100 ஆம்புலன்சில் நோயாளிகள் காத்திருந்தனர். ஆனால் தற்போது 5 க்கும் குறைவான ஆம்புலன்ஸ்கள் காத்திருக்கின்றன. இவற்றையும் சரிசெய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. மேலும் ராஜீவ்காந்தி மருத்துவமனையில் ஆம்புலன்சில் சிகிச்சை அளிக்கும்முறை இல்லாமல் செய்ய ஒரு நொடி கூட தாமதமின்றி சிகிச்சை அளிக்கும் வகையில் 136 படுக்கைகள் அமைக்கப்பட்டுள்ளது.

 

கரோனா காரணமாக டெல்லி சென்று பிரதமரை சந்திக்க முடியவில்லை. அதனால் பின்னர் டெல்லி சென்று பிரதமரை சந்தித்து தமிழக கோரிக்கைகளை வலியுறுத்துவேன்'' என்றார்.

 

 

 

சார்ந்த செய்திகள்