தேனி மாவட்டம் கம்பம் பகுதிக்குள் புகுந்த அரிக்கொம்பன் யானை பல்வேறு நாட்களாக வனத்துறையினருக்கு போக்கு காட்டி வந்த நிலையில், தற்பொழுது பிடிக்கப்பட்ட யானை மணிமுத்தாறு களக்காடு வனப்பகுதிக்குள் விடப்பட்டுள்ளது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து அப்பகுதி பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
கடந்த 7 நாட்களுக்கு முன்பு தேனி மாவட்டம் கம்பம் பகுதிக்குள் புகுந்த காட்டு யானையான அரிக்கொம்பன் சில நாட்களாகவே வனத்துறையினருக்கு போக்கு காட்டி வந்தது. மயக்க ஊசி செலுத்தி பிடிக்க வனத்துறையினர் தொடர்ந்து முயற்சி மேற்கொண்டு வந்த நிலையில் யானையானது கம்பம் அருகே உள்ள சண்முகா அணை பகுதியில் புகுந்தது. தொடர் முயற்சியின் பலனாக ஒரு வழியாக மயக்க ஊசி செலுத்தப்பட்டு யானை பிடிக்கப்பட்டது.
தொடர்ந்து யானையை அடர்ந்த வனப்பகுதிக்குள் விட வனத்துறையினர் முயற்சி மேற்கொண்டு வருகின்றனர். வனத்துறையின் வாகனத்தில் ஏற்றப்பட்ட அரிக்கொம்பனுக்கு வெப்பத்தை தணிக்கும் வகையில் வனத்துறை ஊழியர்கள் தண்ணீரை பீய்ச்சு அடித்தனர். தொடர்ந்து நெல்லை மணிமுத்தாறு களக்காடு வனப்பகுதியில் யானையானது விடப்பட இருக்கிறது.
அகத்தியமலை யானைகள் காப்பகத்தின் ஒரு பகுதியான மணிமுத்தாறு வனப்பகுதிக்குள் தற்பொழுது யானை விடப்பட்டுள்ளது. கடந்த ஏழு நாட்களாக சுற்றித்திரிந்த அரிக்கொம்பன் யானை தற்பொழுது ஒரு வழியாக பிடிபட்டு அடர்ந்த வனப்பகுதியில் விடப்பட்டுள்ளது மக்களை நிம்மதி பெருமூச்சு விட வைத்துள்ளது. இருப்பினும் கேரளாவில் 8 பேரை கொன்ற யானையை களக்காடு பகுதியில் விட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து அப்பகுதி மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். 'கொலைகார யானையை விடுவதற்கு எங்க பகுதிதான் கெடைச்சதா. மேல விட்ட யானை இன்னும் ஒரு மணிநேரத்தில் கீழ வந்திரும்' எனக் குற்றம் சாட்டி போராட்டத்தில் ஈடுபட்ட மக்களை போலீசார் கைது செய்துள்ளனர்.