தன் கால்களைத் தானே அமுக்கிவிட்டபடி, யார் வீட்டு வாசலிலோ மூச்சுவாங்கியபடி உட்கார்ந்த முருகலட்சுமி “நடந்து நடந்து காலெல்லாம் வலிக்குது..”என்றார், சிவகாசி ஒன்றியம்- பள்ளபட்டி பஞ்சாயத்து தலைவர் பதவிக்குப் போட்டியிடும் அந்த வேட்பாளர் பின்னால், வீடு வீடாக வாக்கு சேகரிப்பதற்காக அணி வகுத்து வந்த கூட்டத்தில் ஒருவர்தான் அவர்.
யாரோ ஒரு வேட்பாளர் வெற்றி பெறுவதற்காக, பிரச்சாரத்தின்போது அவரைப் பின்தொடரும் முருகலட்சுமி போன்றவர்கள், வீடு வீடாகப் போய், “அக்கா.. இது நம்ம சின்னம்.. இவரு நம்ம வேட்பாளர்.. மறக்காம ஓட்டு போட்ருங்க..”என்று ஏன் கெஞ்ச வேண்டும்?
ஏழ்மை நிலைதான்! எல்லாம் வயிற்றுப்பாட்டுக்காகத்தான்! ஏதோ ஒரு சின்னத்தின் பதாதையைக் கையில் ஏந்தி, வாக்கு கேட்டு குரல் எழுப்பி, அந்தப் பஞ்சாயத்து ஏரியா முழுவதும் நடந்தே செல்வதை ஒருவித உழைப்பாகவே செய்து வருகிறார்கள். இவர்கள். ஆம். அதற்கான கூலியைத் தந்துவிடுகிறார் அந்த வேட்பாளர். அதே நேரத்தில், குறிப்பிட்ட ஒரு வேட்பாளருக்கு மட்டுமே உழைப்பது என்ற குறுகிய வட்டத்தில் இவர்கள் சிக்குவதில்லை. எந்தக் கட்சியாக இருந்தாலும், எந்த வேட்பாளராக இருந்தாலும், முன்கூட்டியே நேரத்தை நிர்ணயம் செய்துகொண்டு, குறிப்பிட்ட நேரத்தில், வேட்பாளர் வீட்டில் ஆஜராகிவிடுவார்கள்.
ஒரு நாளில் குறைந்தபட்சம் 5 வேட்பாளர்களிடமிருந்தாவது இவர்களுக்கு அழைப்பு வரும். அந்த 2 மணி நேர உழைப்புக்கு ரூ.200 வரை கிடைக்கிறது. இந்தத் தேர்தல் உழைப்பு ஒரு சிலருக்கு நாள் ஒன்றுக்கு ரூ.1000 வரை கிடைப்பதற்கு வழி செய்கிறது. இதில் கொடுமை என்னவென்றால், சிறுவர்களையும் இவர்கள் விட்டு வைக்கவில்லை.
“பஞ்சாயத்து தேர்தல்ல ரொம்பவே பணம் விளையாடுது. எங்கே பார்த்தாலும் வாரியிறைக்கிறாங்க. டோர் கேன்வாஸிங் வேலைக்காக உடன் செல்பவர்களுக்கு, தலைக்கு ரூ.300 கூலி கொடுத்து, சாப்பாடும் போடுறாங்க..” என்றார், அருப்புக்கோட்டை ஒன்றியம், கஞ்சநாயக்கன்பட்டி ஊராட்சிமன்ற உறுப்பினர் (2- வது வார்டு) பதவிக்குப் போட்டியிடும், சி.பி.எம்.தோழர் ராஜா.
மேலும் அவர், "இந்த பணப்புழக்கம் குறித்து அதிமுககாரங்க மேல திமுககாரங்க புகார் கொடுத்தாங்க. தேர்தல் அதிகாரிகளும் எங்க ஏரியாவுக்கே வந்து நிலவரத்தை தெரிஞ்சிக்கிட்டு, ஆளும் கட்சிக்காரங்கள வார்ன் பண்ணிட்டுப் போனாங்க. ஆனா.. நிலைமை மாறவே இல்ல. சரி, இதாச்சும் வேலைக்கான கூலின்னு விட்றலாம். ஆனா.. ஓட்டுக்கு பணம் கொடுக்கிறதுதான் பெரிய கொடுமையா இருக்கு. இந்த விஷயத்துல கட்சி வேறுபாடெல்லாம் எதுவும் இல்ல.
கஞ்சநாயக்கன்பட்டியில மொத்தம் 9 வார்டு. 5 வார்டுக்கு போட்டியில்லாம நியமனம் ஆயிட்டாங்க. பாக்கி இருக்கிற 4 வார்டுலதான் போட்டி. இங்கே பஞ்சாயத்து தலைவருக்கு போட்டியிடறாங்க கார்த்திகைச்செல்வியும் நாகஜோதியும். இவங்க இருக்கிறது வெவ்வேறு பெரிய கட்சி. ஆனா.. சொல்லி வச்ச மாதிரி ரெண்டு பேரும் ஓட்டுக்கு ரூ.300 கொடுக்கிறாங்க. அப்புறம், ஐயாயிரம் ஓட்டு ஒன்றிய கவுன்சிலர், ஐம்பதாயிரம் ஓட்டு மாவட்ட கவுன்சிலர் பதவிக்கு போட்டியிடறவங்களும் ஓட்டுக்கு ரூ.300 தர்றாங்க. திமுக, அதிமுக, மதிமுக, பி.ஜே.பி-ன்னு எல்லாரும் ஓட்டுக்கு பணம் தர்ற விஷயத்துல ஒரே ரகம்தான்." என்றார் ஆதங்கத்துடன்.
ஊராட்சி மன்றங்களில் நிறைவேற்றப்படும் தீர்மானங்களின்படியே அந்தந்த ஊராட்சி பகுதிகளில் வளர்ச்சித் திட்டங்கள் செயல்படுத்தப்படுகின்றன. அதனை நிறைவேற்றுவதற்காகவே, மக்களால் உறுப்பினர்கள் தேர்ந்தெடுக்கப்படுகின்றனர். மக்கள் சேவை என்பது எத்தனை மகத்தானது. ஆனால், உள்ளாட்சி தேர்தல் என்ற பெயரில் தமிழகத்தில் என்னென்னவோ நடக்கிறது. அதனை, மக்களோடு சேர்ந்து சட்டமும் வேடிக்கை பார்க்கிறது.
தமிழகத்தில் சினிமாவும் அரசியலும் சேர்ந்தே பயணிப்பதாலோ என்னவோ, காட்சிக்கு ஏற்ப துணை நடிகர்களை ஏற்பாடு செய்வதுபோல், தேர்தலின் போதெல்லாம் மக்களையும் தயார் செய்துவிடுகிறார்கள்.