தமிழகத்தில் உள்ள அரசுத் தொடக்கப் பள்ளிகளில் காலை சிற்றுண்டி வழங்கும் திட்டத்திற்கு வழிமுறைகள் வகுத்து அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.
தமிழ்நாடு முழுவதும் 1,545 அரசுத் தொடக்கப் பள்ளிகளில் பயிலும் ஒன்றாம் வகுப்பு முதல் ஐந்தாம் வகுப்பு வரை வரையிலான 1.14 லட்சம் குழந்தைகளுக்கு காலை உணவு வழங்கும் திட்டத்தை முதற்கட்டமாக செயல்படுத்திட ரூபாய் 33.55 கோடி நிதி ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது. உப்புமா, கிச்சடி, பொங்கல் உள்ளிட்ட உணவுகள் அனைத்துப் பள்ளி வேலை நாட்களிலும் வழங்க வேண்டும் என்றும், வாரத்தில் குறைந்தது இரண்டு நாட்கள் அந்த பகுதியில் விளையும் சிறுதானியங்கள் அடிப்படையில் சிற்றுண்டியை தயார் செய்து வழங்க வேண்டும் எனவும் அரசாணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
உணவுத் தயாரிக்கப் பயன்படுத்தப்படும் மூலப்பொருட்கள் தரம் வாய்ந்ததாகவும், வெளிப்பொருட்கள் கலக்காமலும் இருக்க வேண்டும். ஒருமுறை பயன்படுத்தப்பட்ட சமையல் எண்ணெய் மீண்டும் பயன்படுத்தக் கூடாது. தயார் செய்யப்பட்ட உணவை குழந்தைகளுக்கு வழங்கும் முன் பள்ளி மேலாண்மை குழு ஒவ்வொரு நாளும் ருசிப் பார்த்து தரத்தை உறுதி செய்ய வேண்டும் என்றும், உணவு தயாரித்தல் மற்றும் விநியோகிக்கும் பணிகளில் ஈடுபடும் சமையலர் மற்றும் உதவியாளர்கள் சுத்தத்தைப் பராமரித்தல் வேண்டும் எனவும் அரசாணையில் குறிப்பிடப்பட்டுள்ளது.