கரோனா நோய்த் தொற்று தமிழ்நாடு முழுவதும் பல்வேறு பாதிப்புகளை ஏற்படுத்திவரும் நிலையில், தற்போது மூன்றாவது அலை துவங்கியுள்ளதால் நோய் பரவலைக் கட்டுப்படுத்த தமிழ்நாடு அரசு தற்போது புதிய கட்டுப்பாட்டு விதிகளை விதித்துள்ளது. அதில் ஒவ்வொரு ஆண்டும் வெகு விமரிசையாக காவிரிக் கரையோரங்களில் புதுமண தம்பதிகளும், கிராமப்புறங்களைச் சேர்ந்தவர்களும் காவிரித் தாய்க்கு ஆரத்தி எடுத்து பூஜை செய்து வழிபாடு நடத்திக் கொண்டாடுவது வழக்கம்.
ஆடிப்பட்டம் விதை விதைப்பதற்காக ஆறுகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடி வெள்ளாமை செழிக்க இந்தப் பூஜை கொண்டாட்டங்கள் நடைபெறும். இந்த வருடம் தமிழ்நாடு அரசு ஆடி பதினெட்டு விழாவிற்குத் தடை விதித்து உத்தரவிட்டுள்ளது. காவிரிக் கரையோரங்களில் பொதுமக்கள் யாரும் ஒன்றுசேரக் கூடாது என்றும் கொண்டாட்டங்களும் பூஜைகளும் தங்களுடைய வீடுகளிலேயே செய்துகொள்ள வேண்டும் என்ற உத்தரவில் பொதுமக்கள் விரக்தியடைந்துள்ளனர். லட்சக்கணக்கானோர் குவியும் ஸ்ரீரங்கம் அம்மா மண்டபம், திருவானைக்கோவில், சமயபுரம் உள்ளிட்ட அனைத்து கோவில்களிலும், பக்தர்கள் இன்றி வழிபாடுகளும் சிறப்பு தரிசனங்களும் நடைபெற்றுவருகின்றன.
பொதுமக்கள் கூடாமல் இருப்பதற்காக அனைத்து பகுதிகளிலும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்படப்பட்டுள்ளது. உத்தரவையும் மீறி வருபவர்களைத் திருப்பி அனுப்பும் பணியை தற்போது காவல்துறை முன்னெடுத்துவருகிறது. எனவே இந்த ஆண்டு மூன்றாவது அலையால் ஆடி பதினெட்டு விழா கொண்டாட முடியாமல் பொதுமக்கள் விரக்தியடைந்துள்ளனர்.