புதிய காருக்கு பூஜை செய்ய கோவிலுக்கு வந்தபோது பிரேக்குக்கு பதிலாக ஆக்சிலரேட்டரை அதன் உரிமையாளர் அழுத்தியதால் கார் கோவிலுக்குள் விர்ரென்று பாய்ந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அரியலூர் மாவட்டம் பெரிய கிருஷ்ணாபுரம் என்ற பகுதியைச் சேர்ந்தவர் சுதாகர். இவர் புதிதாக வாங்கிய தனது காரை பூஜைக்காக கடலூர் மாவட்டம் ஸ்ரீமுஷ்ணம் பூவராக சுவாமி கோயிலுக்கு நேற்று (07.05.2024) மாலை ஓட்டி வந்துள்ளார். அதன் பின்னர் சுதாகரின் புதிய காருக்கு கோயில் வாளாகத்தில் கோயில் நிர்வாகம் சார்பில் சிறப்பு பூஜை செய்யப்பட்டது. அதனைத் தொடர்ந்து சுதாகர் காரை எடுக்க முயன்றபோது, அவர் காரின் பிரேக்கிற்குப் பதிலாக ஆக்சிலேட்டரை மிதித்ததாகக் கூறப்படுகிறது.
இதனால் கட்டுப்பாட்டை இழந்த கார் கோயிலின் நுழைவுவாயில் வழியாக கோயிலுக்குள் புகுந்து கோயிலின் நூறுகால் மண்டபத்தின் தூணில் மோதி நின்றுள்ளது. அதே சமயம் இந்தச் சம்பவத்தால் கோயில் வளாகத்தில் இருந்த பக்தர்கள் அலறியடித்தபடி ஓடினர். இந்த விபத்தில் காரின் முன் பகுதி முற்றிலுமாக சேதம் அடைந்தது. மேலும் காரை ஓட்டிய சுதாகர் நல்வாய்ப்பாக காயங்கள் ஏதுவுமின்றி உயிர் தப்பினார். இந்நிலையில் இந்தச் சம்பவம் தொடர்பான சிசிடிவி காட்சிகள் தற்போது வெளியாகி சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.