தேனி பாராளுமன்ற தொகுதியில் தி.மு.க. வேட்பாளர் தங்க தமிழ்ச்செல்வன், பா.ஜ.க. கூட்டணியில் உள்ள அ.ம.மு.க. வேட்பாளரான டி.டி.வி. தினகரன், அ.தி.மு.க.வில் நாராயணசாமி, நாம் தமிழக கட்சி சார்பில் மதன் மற்றும் சில கூட்டணி வேட்பாளர்களும், சுயேட்சைகளும் தேர்தல் களத்தில் இருந்தாலும் கூட நான்கு முனை போட்டி தான் இருந்து வருகிறது. இந்த நிலையில் தான் வேட்புமனு தாக்கல் செய்வதற்கான இறுதி நாளான இன்று (27.03.2024) டி.டி.வி. தினகரன் வேட்பு மனு தாக்கல் செய்ய மதியம் இரண்டு மணிக்கு மேல் வருவதாக இருந்தது. ஏற்கெனவே ஓ.பி.எஸ்.ஸும் அவரது மகனும் எனக்காக இந்த தொகுதியை விட்டுக் கொடுத்து இருக்கிறார்கள் என்று டி.டி.வி. தினகரன் பிரச்சாரத்தின் போது பேசி இருக்கிறார்.
அதை தொடர்ந்து தான் டி.டி.வி. தினகரன் வேட்பு மனு தாக்கல் செய்வதை பார்த்து வாழ்த்து கூற ஓ.பி.எஸ். முடிவு செய்து, தனது தொகுதியான ராமநாதபுரத்தில் இருந்து மதியம் 01.15 மணிக்கு தேனி கலெக்டர் அலுவலகத்திற்கு வந்தார். அவருடன் பெரியகுளம் ஒன்றிய செயலாளர் செல்லமுத்து, மாவட்ட செயலாளர் சையது கானும் இருந்தனர். ஆனால் ஓபிஎஸ் கலெக்டர் அலுவலகத்திற்கு வெளியே உள்ள மரத்தடியிலேயே நின்று கொண்டு அவர்கள் இண்டு பேரிடம் பேசிக்கொண்டு இருந்தார்.
அப்போது ஓ.பி.எஸ் வழக்கத்துக்கு மாறாக அதிமுக கரை வேட்டி இல்லாமல் பாடர் கரை போட்ட வேட்டி கட்டி இருந்தார். உடன் வந்த ஒருவர் ஓ.பி.எஸ்.உட்காருவதற்காக கலெக்டர் அலுவலகத்துக்குள் சென்று ஒருசேர் எடுக்க முயன்றார். அப்பொழுது அங்குள்ள அதிகாரிகளும் தேர்தல் விதிமுறை மீறி வெளியே சேர் கொண்டு போக கூடாது என்று கூறிவிட்டனர். அதைத் தொடர்ந்து தான் ஓ.பி.எஸ்.ஸுடன் அவர்கள் இரண்டு பேரும் தொடர்ந்து 02.14 மணி வரை அதாவது ஒரு மணி நேரம் நின்று கொண்டிருந்தனர். ஆனால், தமிழக முதல்வராக இரண்டு முறை ஓ.பி.எஸ். இருந்தும் கூட அதை எல்லாம் மறந்து விட்டு டி.டி.வி. தினகரன் வருகைக்காக கலெக்டர் அலுவலகத்திற்கு வெளியே உள்ள மரத்தடி நிழலில் சாதாரணமாக நின்று கொண்டிருந்தார்.
அதைத்தொடர்ந்து தான் டி.டி.வி. தினகரன் பிரச்சார வேனில் 02.15 மணிக்கு கலெக்டர் அலுவலகத்திற்கு வெளியே வந்த டிடிவியை ஓ.பி.எஸ். வரவேற்று சால்வை அணிவித்தார். ஆனால் டிடிவி தினகரன் ஓ.பி.ஆர். உள்பட சிலர் மாவட்ட தேர்தல் அதிகாரியான கலெக்டரிடம் வேட்பு மனுவைத் தாக்கல் செய்துவிட்டு வந்தனர். அதுவரை ஓ.பி.எஸ். மரத்தடியிலேயே நின்று கொண்டிருப்பதை கண்டு அதன் அருகில் மக்கள் உட்காருவதற்காக இரும்புச் சேர் போட்டு இருப்பதை பார்த்த கட்சிக்காரர்கள் சிலர் அதை எடுத்து வந்து போட்டனர். அதில் ஓ.பி.எஸ். உடன் இரண்டு பேரும் உட்கார்ந்து இருந்தனர். அதன் பின் வந்த டி.டி.வி. தினகரனை மீண்டும் வாழ்த்தினார். அப்பொழுது டி.டி.வி. தினகரன் நீங்களும் வாங்கள் பேட்டி கொடுக்கலாம் என்று கூறி அழைத்துச் சென்றார். ஆனால் டி.டி.வி. மட்டும்தான் பேட்டி கொடுத்தாரே தவிர அதன் அருகிலேயே ஓ.பி.எஸ். நின்று கொண்டே இருந்தார் அதன் பின் பிரச்சாரவேனில் டி.டி.வி. தினகரன் ஏறும் வரை அருகிலேயே நின்று வழி அனுப்பி விட்டு தான் திரும்பி சென்றார்.