மெரினாவில் அமைதியாக போராடியவர்கள் மீது தடியடி நடத்திய ஓ.பி.எஸ் ஜல்லிக்கட்டு நாயகனா என அதிமுகவின் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கேள்வி எழுப்பியுள்ளார்.
மாடுகள் மூலம் நடத்தப்படும் ஜல்லிக்கட்டு, கம்பாலா உள்ளிட்ட விளையாட்டுகளுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ள சட்டத்திற்கு எதிராக விலங்குகள் நல அமைப்புகள் சார்பாக உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த நீதிபதி கே.எம்.ஜோசப் தலைமையிலான ஐந்து பேர் கொண்ட அரசியல் அமர்வு, ‘தமிழ்நாடு அரசு சமர்ப்பித்த ஆவணங்கள் திருப்தி அளிக்கும் வகையில் உள்ளது. ஜல்லிக்கட்டு தமிழ்நாட்டின் கலாச்சாரத்தோடு ஒருங்கிணைந்த பகுதி என்பதை ஏற்றுக்கொள்கிறோம்’ என்று கூறி ஜல்லிக்கட்டு போட்டிக்கு தடை விதிக்க மறுத்துள்ளது. உச்சநீதிமன்றத்தின் இந்த தீர்ப்புக்கு அரசியல் கட்சி தலைவர்கள், பிரபலங்கள் என பலரும் ஆதரவு தெரிவித்து வருகின்றனர்.
அந்த வகையில் உச்சநீதிமன்றத்தின் தீர்ப்புக்கு முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் ஆதரவு தெரிவித்து அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில், “ உச்ச நீதிமன்றம் இன்று வழங்கியுள்ள சரித்திர முக்கியத்துவம் வாய்ந்த தீர்ப்பில், ஜல்லிக்கட்டு வீர விளையாட்டு என்பது தமிழ்நாட்டின் கலாச்சாரத்தோடு ஒருங்கிணைந்த பகுதி என்றும், தமிழ்நாடு அரசால் இயற்றப்பட்ட சட்டம் அடிப்படை உரிமைகளை மீறவில்லை என்றும் தெரிவித்து, என்னால் முன்மொழியப்பட்டு, தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையில் நிறைவேற்றப்பட்ட 2017 ஆம் ஆண்டு விலங்குகள் வதைத் தடுப்பு (தமிழ்நாடு திருத்தம்) சட்டம் செல்லும் என்று கூறியுள்ளது. இதனை அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் வரவேற்கிறேன்.
இந்தத் தருணத்தில், 2017 ஆம் ஆண்டு விலங்குகள் வதைத் தடுப்பு (தமிழ்நாடு திருத்தம்) சட்டமுன்வடிவினை தமிழ்நாட்டின் முதலமைச்சர் என்ற முறையில் முன்மொழியும் வாய்ப்பினை வழங்கிய ஜெயலலிதா அவர்களுக்கும், இந்தச் சட்டம் நிறைவேற முழு ஒத்துழைப்பு அளித்த பிரதமர் மோடிக்கும் எனது நன்றியினைத் தெரிவித்துக் கொள்கிறேன். இந்தத் தீர்ப்பு தமிழ்நாட்டின் கலாச்சாரத்திற்கும், தமிழ்நாட்டின் பண்பாட்டிற்கும் கிடைத்த வெற்றி. இதனை நான் தமிழ்நாட்டு மக்களுக்கு அர்ப்பணிக்கிறேன்” எனக் குறிப்பிட்டிருந்தார்.
இந்த நிலையில் செய்தியாளர்களிடம் பேசிய முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், “அதிமுக எடுத்த தொடர் சட்ட நடவடிக்கை காரணமாகவே தமிழர்களின் வீர விளையாட்டான ஜல்லிக்கட்டு போட்டி இடையூறு இல்லாமல் நடைபெறுகிறது. ஆனால் ஜல்லிக்கட்டு நாயகன் என தன்னைத் தானே சொல்லிக்கொள்ளும் ஓபிஎஸ், மெரினா கடற்கரையில் போராட்டத்தில் ஈடுபட்டவர்களை தடியடி நடத்தி கலைத்தது யார்? இதனால் நடுக்குப்பம், நொச்சிகுப்பம் மீனவர்கள் அதிகளவில் பாதிக்கப்பட்டனர். ஓ.பி.எஸ் முதல்வராக இருந்த போது குடியரசு தின விழா நடக்க வேண்டும் என்பதற்காக தடியடி நடத்தினார். அப்படிப்பட்ட இவர் ஜல்லிக்கட்டு நாயகனா?” என்றார்.