அதிமுகவில் ஒற்றைத் தலைமை வேண்டும் என்ற வலியுறுத்தல்கள் தொடர்ந்து வரும் நிலையில் பொதுக்குழு தொடர்பான வழக்கு நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் ராமநாதபுரத்தில் ஓபிஎஸ்-இபிஎஸ் ஆதரவாளர்கள் மோதிக்கொண்ட காட்சிகள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தமிழக எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி அதிமுகவின் தலைமையை ஏற்க வேண்டும் என வலியுறுத்தி ராமநாதபுரம் மண்டபம் கிழக்கு ஒன்றிய கழகத்தின் சார்பில் ராமநாதபுரம் புதிய பேருந்து நிலையத்தில் உள்ள ஒரு தனியார் திருமண மண்டபத்தில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இந்த நிகழ்வில் மகளிர் அணி இணைச் செயலாளர் கவிதா சசிகுமார் மேடையில் பேசிக் கொண்டிருந்தார். அப்பொழுது கூட்டத்தில் கலந்து கொண்டிருந்த ஒரு சிலர் எடப்பாடியை பொதுச் செயலாளராக ஏற்றுக்கொள்ள மாட்டோம் என எதிர்ப்பு தெரிவித்தனர். அப்பொழுது அங்கிருந்த நாற்காலிகளை தூக்கி வீசி தாக்குதலில் ஈடுபட்டனர். இதில் இரு தரப்பினரும் ஒருவரை ஒருவர் அங்கிருந்த நாற்காலிகளை தூக்கி வீசி மோதிக்கொண்டனர். இந்த சம்பவத்தில் அங்கிருந்து இருவருக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர். மேலும் வெளியில் நின்று கொண்டிருந்த வாகனங்கள் மீதும் தாக்குதல் நடத்தப்பட்டது அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.