எட்டு வழிச்சாலை திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து, சேலத்தில் விவசாயிகள் இன்று ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
சேலத்தில் இருந்து சென்னைக்கு பசுமை வழிச்சாலை என்ற பெயரில் புதிதாக எட்டு வழிச்சாலை அமைக்கப்பட உள்ளது. இந்த திட்டத்தை செயல்படுத்தினால் பல்லாயிரக்கணக்கான விவசாய நிலங்கள் அழியும் என்பதால், பல்வேறு விவசாய அமைப்புகள் எதிர்த்து வருகின்றனர்.
தமிழக விவசாயிகள் சங்கம் சார்பில், எட்டு வழிச்சாலை திட்டத்தைக் கண்டித்து இன்று (மே 11, 2018) சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில் ஆர்ப்பாட்டம் நடந்தது. மாநில பொதுச்செயலாளர் சுந்தரம் தலைமையில் நூறுக்கும் மேற்பட்ட விவசாயிகள் கலந்து கொண்டனர்.
சங்கத்தின் சேலம் மாவட்ட இணை செயலாளர் சிவபெருமாள் கூறியது: பசுமை வழிச்சாலை திட்டம் என்ற பெயரில் இயற்கையையும், பசுமையையும் அழித்து திட்டத்தை செயல்படுத்த மத்திய, மாநில அரசுகள் திட்டமிட்டுள்ளன. இதற்காக
சேலம் மாவட்டத்தில் பல்லாயிரக்கணக்கான ஏக்கர் விளை நிலங்களை கையகப் படுத்த ஏற்பாடுகள் நடந்து வருகின்றன.
கையகப்படுத்தும் நிலத்திற்கு சந்தை மதிப்பில் இழப்பீடு கொடுத்தாலும், அதை வைத்துக்கொண்டு விவசாயிகள் எத்தனை காலத்திற்கு வாழ்ந்து விட முடியும்? மத்திய, மாநில அரசுகள் விவசாயிகளை கையேந்தும் நிலைக்குக் கொண்டு சென்று
விட்டன.
இப்போதுள்ள நான்கு வழிச்சாலை மூலமாகவே சென்னைக்கு விரைவாக பயணம் மேற்கொள்ள முடியும் எனும்போது யாருக்காக, எந்த கார்ப்பரேட் நிறுவனங்களின் நலனுக்காக இந்த திட்டத்தை செயல்படுத்துகின்றனர் என்பதை தெளிவு படுத்த வேண்டும்.
எட்டு வழிச்சாலை திட்டத்தால் ஏராளமான சிறு, குறு விவசாயிகள், தென்னை விவசாயிகளின் வாழ்வாதாரம் அடியோடு முடிந்து விடும். திட்டத்தின் பெரும்பகுதி வனப்பகுதி வழியாகச் செல்கிறது. இதனால் இயற்கையாக அமைந்த வனவளம் முற்றிலும் அழிக்கப்பட்டு விடும் ஆபத்து இருக்கிறது.
இந்த திட்டத்தால் சேலம், தர்மபுரி, கிருஷ்ணகிரி, திருவண்ணாமலை,காஞ்சிபுரம் ஆகிய ஐந்து மாவட்டங்கள் பாலைவனம் ஆகிவிடும். இயற்கையை அழிக்கும் எந்த ஒரு திட்டத்தையும் மத்திய, மாநில அரசுகள் செயல்படுத்தக்கூடாது. இவ்வாறு சிவபெருமாள் கூறினார்.
முன்னதாக ஆர்ப்பாட்டத்தின்போது, 'காப்போம் காப்போம் விவசாய நிலத்தைக்காப்போம்', கொல்லாதே 'கொல்லாதே விவசாயிகளைக் கொல்லாதே' என்று விவசாயிகள் முழக்கமிட்டனர். கோரிக்கை வாசகங்கள் எழுதிய அட்டைகளையும் கையில் ஏந்தியபடி ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டனர்.