பொள்ளாச்சி சம்பவத்தில் முக்கிய குற்றவாளியாக கருதப்படும் திருநாவுக்கரசை 4 நாட்கள் போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க கோவை குற்றவியல் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இன்று பொள்ளாச்சி சம்பவத்தில் தொடர்புடைய திருநாவுக்கரசை காவலில் எடுத்து விசாரணை நடத்த கோவை தலைமை குற்றவியல் நீதிமன்றத்தில் சிபிசிஐடி போலீசார் மனு அளித்தனர். திருநாவுக்கரசுவின் பெற்றோரிடம் விசாரணை நடத்திய நிலையில் இந்த மனுவை தாக்கல் செய்யப்பட்டது.
சிபிசிஐடி போலீசாரின் மனு இன்று கோவை தலைமை குற்றவியல் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. ஆனால் திருநாவுக்கரசை நேரில் ஆஜர்படுத்தாமல் வீடியோ கான்பரன்ஸ் மூலம் ஆஜர்படுத்தினர். நீதிமன்ற வளாகத்தில் பயிற்சி வழக்கறிஞர்கள், மாதர் சங்க அமைப்புகள் மற்றும் போராட்ட அமைப்புகளை சேர்த்தவர்கள் கூடியுள்ளதால் திருநாவுக்கரசு மீது தாக்குதல் நடத்தக்கூடும் என வீடியோ கான்பரன்ஸ் மூலம் ஆஜர் படுத்தப்பட்டான் திருநாவுக்கரசு. சுமார் 40 நிமிடம் நடந்த விசாரணைக்கு பிறகு 4 நாட்கள் போலீஸ் காவலில் எடுத்து திருநாவுக்கரசை விசாரிக்க சிபிசிஐடி போலீசாருக்கு நடுவர் உத்தரவிட்டார்.
திருநாவுக்கரசை வீடியோ கான்பரன்ஸில் ஆஜர் படுத்தியது ஏன் என வழக்கறிஞர்கள் நீதிபதியிடம் முறையிட்டனர். உளவுத்துறையின் எச்சரிக்கையை அடுத்து திருநாவுக்கரசு வீடியோ கான்பரன்ஸில் ஆஜர் படுத்தப்பட்டதாக நீதிபதி விளக்கமளித்தார்
சிபிசிஐடி போலீசார் 15 நாட்கள் கோரியிருந்த நிலையில் 4 நாட்கள் மட்டும் காவலில் எடுத்த விசாரிக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.