தமிழக டி.ஜி.பி.சைலேந்திரபாபுவின் அதிரடி உத்தரவின் பேரில் 'ஆப்ரேசன் கஞ்சா 2.0' என்ற திட்டத்தின் அடிப்படையில் தமிழகம் முழுக்க கஞ்சா, குட்கா போன்ற போதை பொருட்களை விற்பனை செய்பவர்களைக் கண்டுபிடித்து அவர்களை கைது செய்வதோடு போதைப் பொருட்களை போலீசார் பறிமுதல் செய்து வருகின்றனர்.
இந்நிலையில் ஈரோடு வழியாகச் சென்ற ரயிலில் கஞ்சா கடத்தியதாக பெண் உள்ளிட்ட இருவரை இன்று ஈரோடு ரயில்வே போலீசார் கைது செய்தனர். அவர்களிடமிருந்து 20 கிலோ கஞ்சாவும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. ஆந்திரா மாநிலம் விசாகப்பட்டினத்திலிருந்து கேரளா மாநிலம் கொல்லம் செல்லும் விரைவு ரயில், ஈரோடு ரயில் நிலையம் வந்தபோது சந்தேகத்தின் பேரில் ரயில்வே இருப்புபாதை போலீசார் சோதனை நடத்தினர். சோதனையில் பெட்டி இருக்கைக்கு அடியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த கஞ்சா மூட்டையைக் கண்டுபிடித்தனர். அதை கொண்டு வந்த இருவரையும் பிடித்து விசாரித்ததில் அவர்கள் தென்காசியைச் சேர்ந்த ஆனந்தராஜ் மற்றும் மகாலட்சுமி என்பதும், விற்பனைக்காக விசாகப்பட்டினத்திலிருந்து அந்த கஞ்சாவை வாங்கி வந்ததும் தெரியவந்தது. ஏற்கனவே பல காவல் நிலையங்களில் இவர்கள் மீது கஞ்சா கடத்தல் வழக்குகள் இருப்பதும் தெரிந்தது. இருவரையும் கைது செய்த போலீசார் அவர்கள் கடத்தி வந்த கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.