எங்கள் கிராமத்தில் டாஸ்மாக் கடையை திறக்க வேண்டும் என கோரிக்கை விடுத்து நொளம்பூர் கிராமத்தை சேர்ந்த பெண்கள் மாவட்ட ஆட்சியரிடம் மனு கொடுத்து வியப்பை ஏற்படுத்தியுள்ளனர்.
தமிழகம் முழுவதும் பல்வேறு இடங்களிலும் டாஸ்மாக் கடைக்கு எதிர்ப்பு தெரிவித்தும், டாஸ்மாக் கடைகளை மூடக்கோரியும் பொதுமக்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். பல இடங்களில் கடைகள் சூறையாடப்பட்டப்பட்ட சம்பவமும் நடந்துள்ளது.
டாஸ்மாக் கடைக்கு எதிராக மக்கள் எதிர்ப்பு வலுத்து வரும் நிலையில், இதற்கெல்லாம் நேர் மாறாக விழுப்புரம் மாவட்டம், திண்டிவனம் அருகே உள்ள நொளம்பூர் கிராமத்தை சேர்ந்த ஆண்களும், பெண்களும் ஒன்று சேர்ந்து விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் சுப்பிரமணியத்தை சந்தித்து தங்களது ஊரில் டாஸ்மாக் கடை திறக்க வேண்டும் என்று கூறி கோரிக்கை மனு அளித்துள்ளனர்.
இதுகுறித்து ஆட்சியரிடம் மனு அளித்து வந்த கிராம மக்களிடம் கேட்ட போது, அவர்கள் கூறியதாவது, நாங்கள் நொளம்பூர் கிராமத்தில் வசித்து வருகிறோம். எங்கள் கிராமத்தில் டாஸ்மாக் கடை திறப்பதால் எங்களுக்கு எந்த பாதிப்பும் இல்லை. ஏனெனில் எங்கள் கிராமத்தை சேர்ந்தவர்கள் பெரும்பாலானோர் கூலி வேலை செய்து வருகின்றனர். இவர்கள் காலையில் வேலைக்கு சென்றுவிட்டு இரவு 7 மணியளவில் வீடு திரும்புவார்கள்.
வேலை முடிந்து வந்ததும் உடல் அசதியை போக்குவதற்காக சிலர் டாஸ்மாக் கடைக்கு சென்று மது அருந்தி வருகின்றனர். எங்கள் கிராமத்தில் டாஸ்மாக் கடை இல்லாததால் திண்டிவனம், ஆவணிப்பூர், சாரம், ஈச்சேரி உள்ளிட்ட வெகு தொலைவில் உள்ள பகுதிகளுக்கு சென்று மது குடிக்கின்றனர்.
மது குடித்துவிட்டு இரவு வெகுநேரம் கழித்து இருசக்கர வாகனங்களில் வீட்டிற்கு புறப்படுகிறார்கள். அவ்வாறு வரும்போது அடிக்கடி சாலை விபத்தில் சிக்கி இறந்து விடுகின்றனர். இதுவே நொளம்பூரிலேயே டாஸ்மாக் கடை இருந்தால் எந்த சிரமமும் இன்றி மது வாங்கி விட்டு வீட்டிற்கு வந்து குடித்துவிட்டு தூங்கி விடுவார்கள். இதனால் யாருக்கும் எந்த பிரச்சினையும் ஏற்படாது. எனவே நொளம்பூரில் டாஸ்மாக் கடையை திறக்கலாம். இதனால் எந்த பாதிப்பும் இல்லை என கிராம மக்கள் தெரிவித்தனர்.