அ.தி.மு.க.வில் எம்.ஜி. ஆர், ஜெயலலிதாவின் உண்மையான விசுவாசிக்கு தான் இரட்டை இலை சின்னம் கிடைக்கும் என்று திண்டுக்கல் மாயத்தேவர் மகன் செந்தில்குமரன் தெரிவித்துள்ளார்.
தமிழகமே எதிர்பார்த்துக் கொண்டிருந்த அ.தி.மு.க. இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் நடைபெற்ற அ.தி.மு.க.வின் பொதுக்குழு கூட்டம் செல்லாது என உயர்நீதிமன்றம் உத்தரவிட்டதையடுத்து, ஓ.பன்னீர்செல்வத்தின் ஆதரவாளர்கள் மிகுந்த மகிழ்ச்சியில் உள்ளனர். அ.தி.மு.க.வின் முதல் எம்.பி.யும், இரட்டை இலை சின்னத்தைத் தேர்வு செய்தவருமான திண்டுக்கல் கே.மாயத்தேவரின் (சின்னாளபட்டி) மகன் கே.எம்.செந்தில்குமரன் தலைமையில் ஓ.பி.எஸ். ஆதரவாளர்கள் நூற்றுகணக்கானோர் திண்டுக்கல் பேருந்து நிலையம் அருகே உள்ள எம்.ஜி.ஆர். சிலைக்கு மாலை அணிவித்து ஐயா ஓ.பி.எஸ். வாழ்க, எம்.ஜி.ஆர். புகழ் ஓங்குக, புரட்சித்தலைவி புகழ் ஓங்குக என்று கோஷமிட்டவாறு பட்டாசு வெடித்து இனிப்புகள் வழங்கி கொண்டாடினார்கள்.
அப்போது எம்.ஜி.ஆர். சிலை அருகே இருந்த எடப்பாடி படம் இருந்த பேனரை கிழித்து எரிந்தனர். அதன்பின், செய்தியாளர்களைச் சந்தித்து பேசிய மாயத்தேவர் மகன் செந்தில்குமரன், "உயர்நீதிமன்ற தீர்ப்பு தர்மம் வென்றுள்ளது என்பதை எடுத்துக் காட்டியுள்ளது. எடப்பாடியைக் கொண்டு வந்த சின்னம்மா சசிகலா, அண்ணன் டிடிவி தினகரன், ஐயா ஓ.பன்னீர்செல்வத்தை ஓரங்கட்டிவிட்டு அ.தி.மு.க. என்ற மாபெரும் கட்சியை தனது கட்டுப்பாட்டில் கொண்டு வர எடப்பாடி பழனிசாமி நினைத்தார். ஆனால் நீதி தேவதை நீதியை நிலைநாட்டுவது போல் வரலாறு காணாத தீர்ப்பை வழங்கி உள்ளது. நீதிமன்றத் தீர்ப்பு மூலம் விலகி இருந்தவர்கள் ஒன்று சேர்ந்து அ.தி.மு. க.வை பலம் பெற செய்வார்கள். எடப்பாடி பழனிசாமியின் துரோகத்திற்கும் முடிவு கட்டுவார்கள். அதுபோல் மீண்டும் ஓ.பி.எஸ். முதலமைச்சராக வேண்டும் என்பது எங்கள் விருப்பம். அவருக்கு கிடைத்த முதல் வெற்றி தொடரும்" என்று கூறினார்.