தமிழக பாஜக பொதுச் செயலாளராக இருந்த கே.டி.ராகவன் தொடர்பான வீடியோ ஒன்று அண்மையில் வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தியிருந்தது. இதற்கு பல்வேறு அரசியல் தரப்புகளில் இருந்து பல்வேறு கருத்துகளை தலைவர்கள் தெரிவித்திருந்தனர். இது தொடர்பாக கரூர் எம்.பி ஜோதிமணி காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்திருந்தார். பாஜகவில் பெண்களின் நிலை கேள்விக்குறியாக உள்ளதாக பல்வேறு கருத்துக்கள் தெரிவிக்கப்பட்டு வந்தது.
இந்நிலையில் தமிழகத்தில் உள்ள பிற கட்சிகளை ஒப்பிடும்போது பாஜகவில் தான் பெண்களுக்கு பாதுகாப்பு அதிகமாக உள்ளதாக மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார். இன்று விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டையில் செய்தியாளர்களை சந்தித்த அவர் இந்த கருத்தினை பதிவு செய்துள்ளார்.மேலும் பேசிய அவர், ''நிதியமைச்சராக இருந்தபோது டெல்லி ரயில்வேயை தனியார் மயமாக்க ப.சிதம்பரம் ஒப்புதல் அளித்தார். நிதியமைச்சராக இருந்தபோது தனியார்மயமாக்க ஒப்புதல் தந்த ப.சிதம்பரம் தற்போது பாஜக அரசை விமர்சித்து வருகிறார் எனவும் தெரிவித்தார்.