நாடு முழுவதும் மத்திய தொழிற்சங்கங்கள் சார்பில் 2 நாள் வேலை நிறுத்தம் தொடங்கியது. வேலை நிறுத்தம் நடைபெறுவதை ஒட்டி தமிழகம் முழுவதும் சுமார் ஒரு லட்சம் போலீசார் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர். தொழிற்சங்கங்கள் நடத்தும் இந்த வேலை நிறுத்தப் போராட்டத்தில் போக்குவரத்து ஊழியர்கள் பங்குபெறக்கூடாது. அப்படி பங்கு பெற்றால் சம்பளம் பிடித்தம் செய்யப்படும், துறை ரீதியான நடவடிக்கை எடுக்கப்படும் என போக்குவரத்துத் துறை சார்பில் சார்பில் ஏற்கனவே எச்சரிக்கை விடுக்கப்பட்டு வந்தது.
இந்நிலையில் சென்னை உட்பட தமிழகத்தின் பல இடங்களில் குறைந்த அளவே பேருந்துகள் இயக்கப்படுகிறது. சென்னையில் வேலை நிறுத்தத்தால் பேருந்துகள் சரிவர ஓடாததால் பொதுமக்கள் அவதிக்குள்ளாகினர். பாரிமுனை, அண்ணா நகர், வடபழனி, தியாகராயநகர் பெரம்பூரில் 90% பேருந்துகள் இயங்கவில்லை. இதனால் விடுமுறைக்காக சொந்த ஊர் சென்று விட்டு சென்னை திரும்பியவர்களுக்குப் பேருந்து கிடைக்காததால் அவதிக்குள்ளாகினர். சென்னை மட்டுமில்லாது. அதேபோல் விழுப்புரம், விருதுநகர், திருவண்ணாமலை, நாமக்கல், ஈரோடு உள்ளிட்ட மாவட்டங்களில் பஸ் சேவை பாதிக்கப்பட்டுள்ளது. கோயம்பேடு பேருந்து நிலையத்தில் பேருந்துகள் சரிவர இயக்கப்படாததால் பயணிகள் காத்திருக்கும் சூழல் ஏற்பட்டுள்ளது. பேருந்துகள் குறைந்தளவே செல்வதால் ஷேர் ஆட்டோக்கள், ஆட்டோக்கள், மெட்ரோ ரயில் போன்றவற்றில் மக்களின் கூட்டம் அதிகமாக காணப்படுகிறது. அதேபோல் தமிழகத்தில் கேரள எல்லைப்பகுதியான களியக்காவிளை, பாடசாலை உள்ளிட்ட பகுதிகளில் பேருந்துகள் நிறுத்தப்பட்டுள்ளதால் மாநில எல்லைக்குள் பொதுமக்கள் அவதிக்குள்ளாகி உள்ளனர்.
சென்னையை பொறுத்தவரை 3,175 மாநகர பேருந்துகள் உள்ள நிலையில் 318 பேருந்துகள் (10.02 சதவிகிதம்) பேருந்துகள் மட்டுமே இயக்கப்படுகிறது. 47 எஸ்.இ.டி.சி பேருந்துகளில் 40 பேருந்துகள் மட்டுமே இயக்கப்படுவதாக தமிழக போக்குவரத்து துறை தெரிவித்துள்ளது. விழுப்புரம் கோட்டத்தில் 27.82 சதவிகிதம் பேருந்துகளும், சேலத்தில் 37.94 சதவிகிதம் பேருந்துகளும், கோவை கோட்டத்தில் 21.56 சதவிகிதம் பேருந்துகளும் இயக்கப்பட்டு வருகின்றன.