ஆன்லைன் விளையாட்டு மோகத்தால் கல்லூரி மாணவர் ஒருவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
பெரம்பலூர் மாவட்டம் நக்கசேலம் பகுதியில் உள்ள அரவிந்தா நகரில் வசித்து வருபவர் அன்பழகன். இவரது மகன் பாலகுமார் (வயது 18). இவர் திருச்சியில் உள்ள தனியார் கல்லூரி ஒன்றில் மெக்கானிக்கல் இன்ஜினியரிங் முதலாம் ஆண்டு படித்து வருகிறார். இந்நிலையில் பொங்கல் விடுமுறைக்கு வீட்டிற்கு வந்திருந்த பாலகுமார் நீண்ட நேரம் செல்போனில் ஆன்லைன் கேம் விளையாடிக் கொண்டு இருந்துள்ளார். இதனை கவனித்த மாணவரின் தாயார் பாலகுமாரை கண்டித்துள்ளார். இதனால் பாலகுமார் மனமுடைந்து விரக்தியில் இருந்த நிலையில் நேற்று மதியம் வீட்டில் யாரும் இல்லாதபோது பாலகுமார் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார்.
இதனைக் கண்ட பாலகுமாரின் தாத்தா அருகில் இருந்தவர்களிடம் இதுகுறித்து தெரிவித்துள்ளார். அங்கு இருந்தவர்கள் மாணவனை மீட்டு அருகில் உள்ள தனியார் மருத்துவமனை ஒன்றில் அனுமதித்தனர். அப்போது மருத்துவர்கள் பரிசோதனை செய்து பார்த்த போது மாணவன் ஏற்கனவே இறந்துவிட்டதாகத் தெரிவித்தனர். இதற்கிடையில் ஏற்கனவே பாலகுமார் இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு இதே போல் ஆன்லைன் கேம் விளையாடிக் கொண்டு இருக்கும்போது அவரது குடும்பத்தினர் கண்டித்துள்ளனர். பாலகுமார் தற்கொலைக்கு முயன்ற போது அப்போதே மாணவனின் குடும்பத்தினர் மீட்டு மருத்துவமனையில் அனுமதித்து காப்பாற்றியது குறிப்பிடத்தக்கது. இதுகுறித்து போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். ஆன்லைன் கேம் மோகத்தால் மாணவன் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.