ஆன்லைன் சூதாட்ட தடை சட்ட மசோதாவிற்கு தடை விதிக்க வேண்டும் என்று ஆன்லைன் சூதாட்ட நிறுவனங்கள் தாக்க செய்த வழக்கில் அந்த மசோதாவிற்கு தடை விதிக்க முடியாது என உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
முன்னதாக கடந்த வருடம் அக்.19 ஆம் தேதி தமிழ்நாடு சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட ஆன்லைன் சூதாட்ட தடை மசோதாவிற்கு தமிழக ஆளுநர் ஒப்புதல் அளிக்காத நிலையில், 131 நாட்களுக்கு பின் கடந்த மார்ச் 6 ஆம் தேதி தமிழ்நாடு அரசுக்கு மீண்டும் ஆளுநர் அனுப்பி வைத்திருந்தார். இதனைத்தொடர்ந்து மீண்டும் இந்த தடைச் சட்ட மசோதா தமிழ்நாடு சட்டப்பேரவையில் கடந்த அக்டோபர் மாதம் 19 ஆம் தேதி நிறைவேற்றப்பட்டு மார்ச் 24 ஆம் தேதி முறைப்படி ஆளுநருக்கு அனுப்பப்பட்டது. தொடர்ந்து பல்வேறு அரசியல் கட்சிகளும் தடை மசோதாவிற்கு ஒப்புதல் அளிக்க வேண்டும் என வலியுறுத்தி வந்தன.
மறுபுறம் தமிழ்நாடு ஆளுநரின் சர்ச்சை பேச்சுகளுக்கும் பல அரசியல் கட்சித் தலைவர்கள் கண்டனங்களைப் பதிவு செய்திருந்தனர். தொடர்ந்து தமிழ்நாடு சட்டப்பேரவையில் ஆளுநருக்கு எதிரான தனி தீர்மானம் கொண்டுவரப்பட்டு, நிறைவேற்றப்பட்டது. இந்தத் தீர்மானம் நிறைவேற்றப்பட்ட சில மணி நேரத்திற்குள், இரண்டாம் முறை நிறைவேற்றி அனுப்பப்பட்ட ஆன்லைன் சூதாட்ட தடை மசோதாவிற்கு தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி ஒப்புதல் அளித்தார்.
இதனைத் தொடர்ந்து தமிழ்நாடு அரசின் ஆன்லைன் சூதாட்ட தடை சட்ட சட்டம் அரசிதழில் வெளியிடப்பட்டது. அந்த அரசிதழில், ஆன்லைன் விளையாட்டுகளை ஒழுங்குபடுத்துவது தொடர்பாக ஆணையம் அமைக்கப்படும். இதற்கு, தலைமைச் செயலாளர் பதவிக்கு குறையாத பதவியை வகித்து ஓய்வு பெற்றவர் ஆணையத் தலைவராக இருப்பார். ஓய்வு பெற்ற ஐ.ஜி. மற்றும் தகவல் தொழில்நுட்பத்தில் நிபுணத்துவம் பெற்றவர் ஆணைய உறுப்பினர்களாக இருப்பர். அதேபோல், ஆன்லைன் விளையாட்டில் நிபுணத்துவம் பெற்ற ஒருவரும் விளையாட்டு ஆணையத்தின் உறுப்பினராக இருப்பார். ஆன்லைன் விளையாட்டை வழங்குவோரை ஆணையம் கண்காணிக்கும், அவர்களை பற்றிய தரவுகளை பராமரிக்கும். ஆன்லைன் விளையாட்டை அளிப்பவர்கள் மீதான புகாரை விளையாட்டு ஆணையம் தீர்த்து வைக்கும்’ என அதில் தெரிவிக்கப்பட்டிருந்தது.
இந்த தடை சட்டத்தை செல்லாது என அறிவிக்கக்கோரி 69 ஆன்லைன் விளையாட்டு நிறுவனங்களை உறுப்பினர்களாக கொண்ட அகில இந்திய விளையாட்டு கூட்டமைப்பு சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இதனைத் தவிர்த்து தனித்தனியே விளையாட்டு நிறுவனங்கள் சார்பில் வழக்குகளும் தொடரப்பட்டது. அந்த வழக்குகளில், தமிழக அரசின் தடைச் சட்டத்தினால் தங்கள் கூட்டமைப்பில் உள்ள உறுப்பினர்கள் தமிழ்நாடு மட்டுமல்லாது நாடு முழுவதும் பாதிப்புகளை எதிர்கொள்வதாகவும், தமிழக அரசின் தடை சட்டத்திற்கு ஆளுநர் ஒப்புதல் அளித்ததற்கு முந்தைய நாள் மத்திய அரசின் தகவல் தொழில்நுட்பத்துறை ஆன்லைன் விளையாட்டுகளை முறைப்படுத்தும் வகையில் திருத்தங்களை அறிவித்துள்ளதாகவும் அதில் தெரிவிக்கப்பட்டு இருந்தது.
ஆன்லைன் விளையாட்டுகளால் இளைஞர்கள் உடல் ரீதியாகவும் மன ரீதியாகவும் பாதிக்கப்படுகின்றனர், என கூறப்படும் சூழலில் இது தொடர்பான எந்த அறிவியல் பூர்வமான ஆய்வுகளும் மேற்கொள்ளப்படவில்லை என்றும் அவர்கள் தெரிவித்துள்ளனர். எந்த அடிப்படை ஆதாரமும் இல்லாமல் இந்த சட்டத்தை திருத்த தமிழக அரசுக்கு அதிகாரம் இல்லை என்றும் உயர்நீதி மன்றத்தால் ரத்து செய்யப்பட்ட சட்டத்தை மீண்டும் இயற்றி உள்ளதாகவும் அதை ரத்து செய்ய வேண்டும் என்றும் ஆன்லைன் நிறுவனங்கள் கூறின.
இந்த வழக்கு உயர்நீதிமன்ற பொறுப்பு நீதிபதி டி.ராஜா அமர்வு முன் விசாரணைக்கு வந்தது. விளையாட்டு நிறுவனங்கள் சார்பில் ஆஜரான வழக்கறிஞர் ரம்மி விளையாட்டு என்பது திறைமைக்கான விளையாட்டு தான். ஆனால் அனைத்து ஆன்லைன் விளையாட்டிற்கும் தடை விதித்தது சட்ட விரோதமானது என வாதிட்டார். அப்போது குறிக்கிட்ட நீதிபதி, தடை விதிப்பதில் என்ன தவறு உள்ளது, தடை விதிக்க அரசுக்கு அதிகாரம் உள்ளது என்றும் அவர் தெரிவித்தார். மேலும் மக்களின் நலன் தான் முக்கியம். இதனால் மக்கள் அதிகமானோர் தற்கொலை செய்துகொண்டுள்ளனர். அதனால் தடை விதித்துள்ளனர் என்றும் தமிழ்நாட்டில் குதிரைப் பந்தயம் லாட்டரி விற்பனை போன்றவையும் தடை செய்யப்பட்டுள்ளன என்றும் அவர் குறிப்பிட்டார்.
தொடர்ந்து அனைத்து தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள், ஆன்லைன் சூதாட்ட தடை சட்டத்திற்கு இப்போது இடைக்கால உத்தரவு பிறப்பிக்க முடியாது என்றும் இந்த வழக்கில் தமிழக அரசு பதிலளிக்க வேண்டும் என்றும் உத்தரவிட்டு வழக்கின் விசாரணையை ஜூன் 2 ஆம் தேதிக்கு ஒத்தி வைத்தனர்.