திருச்சி மாவட்டம், லால்குடி கல்லகம் பகுதியைச் சோ்ந்த பாலசந்திரன்(30), பகுதி நேர வேலைக்காக இணையதளம் மூலம் வாய்ப்பை தேடி கொண்டிருந்தார். இந்நிலையில், ஒரு இணையதளத்தில் தேடி கொண்டிருந்த போது, அடையாளம் தெரியாத மா்ம நபரிடம் இருந்து வந்த மா்ம அழைப்பில் பேசியவர், பொருட்கள் வாங்கினால் அதற்கு கமிஷன் கொடுக்கப்படும் என்று கூறியுள்ளார். இதனை நம்பி, பாலசந்திரன் கடந்த பிப்ரவரி மாதம் 4ஆம் தேதி முதலில் 300 ரூபாய் செலுத்தி ஒரு பொருளை வாங்கியுள்ளார். அதற்கு கமிஷனாக 30 ரூபாய் பாலசந்திரன் வங்கி கணக்கிற்கு வந்துள்ளது. அதனைத் தொடர்ந்து 10 ஆயிரம், 50 ஆயிரம் என்று பல்வேறு தவணைகளில் மொத்தம் 9 லட்சத்து, 89 ஆயிரத்து 511 ரூபாய் பணத்தை செலுத்தியுள்ளார். அதற்கான கமிஷன் தொகை காட்டப்பட்டாலும், அதனை பயன்படுத்த முடியவில்லை. எனவே தான் ஏமாற்றப்படுவதை அறிந்த பாலசந்திரன், நேற்று மாலை சைபா் க்ரைம் பிரிவில் புகார் கொடுத்துள்ளார். அந்தப் புகாரின் அடிப்படையில் காவல்துறையினா் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.