ஆந்திரா, கர்நாடகா, மகாராஷ்டிரா, குஜராத், மத்திய பிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களில் பெய்த கனமழையால் ஏற்பட்ட வெள்ளப் பெருக்கால் வெங்காய உற்பத்தி கடுமையாக பாதிக்கப்பட்டது. இதன்காரணமாக நாடு தழுவிய பிரச்சனையாக வெங்காய விலை உயர்வு உருவெடுத்துள்ளது.
கர்நாடகா, ஆந்திரா பகுதிகளில் இருந்து சென்னை கோயம்பேடு மார்கெட்டுக்கு நாள் ஒன்றுக்கு 90 லாரிகளில் வெங்காயம் வந்து கொண்டிருந்த நிலையில், தற்போது வரத்து பாதிக்கு பாதியாக குறைந்துள்ளது. இதனால் தமிழகத்திலும் வெங்காய விலை உச்சத்தை எட்டி, மார்கெட்டுகளில் ரூ.150க்கு விற்பனை செய்யப்படுகிறது.
இந்த விலை உயர்வை கட்டுப்படுத்த வேண்டும் என்றும், அதற்கு மாற்று ஏற்பாடுகளை மேற்கொள்ள வேண்டும் என்றும் அரசியல் கட்சிகள் குரல் கொடுத்து வருகின்றனர். இதற்கிடையில் மத்திய அரசு வெங்காயத்தின் விலை உயர்வைக் கட்டுப்படுத்துவதற்காகவும், வெங்காயத்தின் புழக்கத்தை அதிகரிப்பதற்காகவும் சில்லறை வியாபாரிகள் மற்றும் மொத்த வியாபாரிகள் கையிருப்பில் வைத்திருக்கும் வெங்காயத்தின் அளவுக்கு கட்டுப்பாடு விதித்துள்ளது.
இந்நிலையில் தற்போது வெங்காயத்தின் புழக்கம் சற்று அதிகரித்துள்ளதாகவும், ஜனவரி முதல் வாரத்தில் வெங்காயத்தின் விலை குறைய வாய்ப்பு உள்ளதாகவும் வியாபாரிகள் தெரிவிக்கின்றனர். இந்த செய்தியால் பொதுமக்கள் சற்று மகிழ்ச்சியில் உள்ளனர்.
இதற்கிடையில் குஜராத்தின் சூரத் நகர பலன்பூர் படியா பகுதியில், கடையை உடைத்து கொள்ளையடிக்கச் சென்ற திருடர்கள், கடையில் இருந்த பணத்தை விட்டு விட்டு வெங்காய மூட்டையைத் திருடிச் சென்ற சுவாரசியமான சம்பவம் அரங்கேறியுள்ளது. தன் வாழ்நாளில் இது போன்ற ஒரு திருட்டை நான் பார்த்ததில்லை என்று அந்த கடை உரிமையாளர் காமெடியாக தெரிவித்துள்ளார்.
பணத்தை திருடிய காலம் போய் வெங்காயம் திருடும் காலம் வந்ததை மத்திய, மாநில அரசுகள் கவனத்தில் கொண்டு செயல்பட வேண்டும் என்பதும், விலை உயர்வை கட்டுப்படுத்த துரிதமாக அரசு செயல்பட வேண்டும் என்பதும் மக்களின் கோரிக்கையாக உள்ளது.