கடந்த இரு மாதங்களுக்கு முன்புவரை வெங்காயத்தின் விலை கடுமையாக உயர்ந்திருந்தது. அதன்பின் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வெங்காயத்தின் விலை கட்டுப்பாட்டுக்குள் வந்தது.
தமிழகத்தில் சின்ன வெங்காயம் கடந்த அக்டோபர் மாதம் அதிகபட்சமாக கிலோ ரூ.130 வரை விற்கப்பட்டது. தொடர் மழையும், வட மாநில வெங்காய வருகை குறைவும் அதற்குக் காரணமாகக் கூறப்பட்டது. அதன்பின் படிப்படியாக விலை குறைந்து கடந்த சில வாரங்களாக கிலோ 40 முதல் 45 ரூபாயாக விற்பனையானது.
இந்த நிலையில், சில தினங்களாக மீண்டும் சின்ன வெங்காய விலை உயர்ந்து வருகிறது. ஈரோடு சந்தையில் கடந்த வாரத்தைவிட இரு மடங்கு உயர்ந்து இன்று கிலோ 80 ரூபாய் வரை விற்பனையாகிறது. இதற்கு வெங்காய வரத்து குறைவே காரணம் என்கின்றனர் வியாபாரிகள்.
பெரிய வெங்காயத்தின் விலையும் கிலோ 30 ரூபாயிலிருந்து 50 ரூபாயாக உயர்ந்துள்ளது. வட மாநிலங்களிலிருந்து வரத்து குறைந்திருப்பதே இந்த விலை உயர்வுக்குக் காரணம் என்கின்றனர். நாள்தோறும் ஈரோடு சந்தைக்கு 150 டன் வெங்காயம் வரத்து இருந்த நிலையில், அது பாதியாக இப்போது சரிந்துள்ளது. வெங்காயத்தின் விலை மீண்டும் உயர்ந்து வருவது பொதுமக்களைக் கவலையடைய வைத்துள்ளது.