ஒரு காலத்தில் இந்தியாவின் ஆட்சி மாற்றத்திற்கு முக்கியகாரணமாக இருந்த வெங்காய விலை உயர்வு, தற்போது பொதுமக்களின் மீது அன்றாட இயல்பு வாழ்க்கையை பாதிக்கப்பட்டள்ளது.
ஒவ்வொரு வீட்டின் சமையல் அறையிலும் தவறாது இருக்கும் பொருள் வெங்காயம். நாட்டின் முக்கிய உணவுப்பொருளாக இருக்கும் வெங்கயாத்தின் விலை கடந்த 2 மாதங்களில் 3 மடங்கு உயர்ந்துள்ளது. இந்த விலை உயர்வால் பொதுமக்கள் கடும் அவதிக்குள்ளாகியுள்ளனர்.
இந்நிலையில், திருச்சி – சென்னை தேசிய நெடுஞ்சாலையில் பழைய பால்பண்ணை அருகில் உள்ள அனைத்து அழுகும் பொருள்களின் கமிஷன் மண்டியில் கடந்த ஜீலை மாதம் இறுதியில் 50 கிலோ பெரிய வெங்காயத்தின் விலை ரூ.800 ஆக இருந்த நிலையில், ஆகஸ்ட் மாதம் முதல் வாரம் முதல் 1000, 1300, 1600 என படிப்படியான உயர்ந்து காணப்பட்டது.
இந்நிலையில், தற்போது, மூன்று மடங்கு விலை உயர்ந்து ரூ. 2400க்கு விற்கப்பட்டு வருகிறது. மேலும், சின்னவெங்காயத்தின் விலையும் கடுமையாக உயர்ந்துள்ளதால், வெங்காயத்தை நம்பி தொழில் செய்யும் சிறு, குறு வணிகர்கள் முதல் பெரும் வணிகர்கள் வரை அனைத்து தரப்பினரும் கடுமையான பாதிக்கப்பட்டு வருகின்றனர்.
இது குறித்து வெங்காய வியாபாரி கூறுகையில், தமிழகத்திற்கு பெரும்பாலும் வடஇந்தியாவில் இருந்தே வெங்காயம் இறக்குமதி செய்யப்பட்டு வருகிறது. கடந்த ஜீலை, ஆகஸ்ட் மாதங்களில் அங்கு ஏற்றபட்ட மிகக்கடுமையான மழைப்பொழிவு காரணமாக வெங்காயத்தின் விலை உயர்ந்தது. இந்நிலையில், கடந்த சில நாட்களாக தமிழகத்திலும் பரவலாக மழைப்பொழிவு ஏற்பட்டு வருகிறது. அதுமட்டுமின்றி, லாரிகள் வேலைநிறுத்தம் உள்ளிட்ட காரணங்களினால் வெங்காயத்தின் விலை தற்போது, கிடுகிடு என உயர்ந்துள்ளது. இதனால், நுகர்வோர்களின் வருகையும் குறைந்துள்ளது. கடந்த 2 மாதங்களாகவே வெங்காயத்தின் அடக்க விலை கிடைத்தால் போதும் என வியாபாரம் செய்து வருகிறோம்.
இது பற்றி சிறு வணிகர் ஒருவர் கூறுகையில், டீ கடையில் பஜ்ஜீ, போண்டா போன்ற உணவுவகைகளையும் விற்பனை செய்து வருகிறேன். மழைப்பொழிவு ஏற்பட்டால் வெங்காய விலை உயர்வு என்பது இயல்பான ஒன்றே. ஆனால், இந்த அளவிற்கு உயரும் என்று நினைக்கவே இல்லை. பால் விலை உயர்வால் டீயின் விலையும் உயர்த்தப்பட்டுள்ளது. இந்நிலையில், வெங்காயத்தின் விலைஉயர்வால் திண்பன்டங்களின் விலையும் உயர்த்த வேண்டிய நிர்பந்தம் எழுகிறது. ஆனால், விலையை உயர்த்தினால் மக்கள் யாரும் வாங்க முன்வரமாட்டார்கள். எனவே, திண்பன்டங்களை வெங்காய விலை குறையும் வரையில் உற்பத்திசெய்யமால் இருப்பதே நல்லது என முடிவெடுத்துள்ளேன். இதனால், நிச்சயம் வியாபாரம் குறையும். இருப்பினும், வேறு வழி இல்லை. தங்கத்திற்கு நிகராக வெங்காயம் விற்றால் சிறு வணிகர்கள் என்ன செய்யமுடியும் என்கிறார் கவலையுடன்.