Skip to main content

மீன் வலை தொடர்பான பிரச்சனை; அடித்துக்கொல்லப்பட்ட நபர்

Published on 29/07/2024 | Edited on 29/07/2024
One person lost his life in the matter of seeing fish net

திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை அடுத்த மூக்னூர் ஊரான் வட்டம் பகுதியைச் சேர்ந்தவர் காளியப்பன். இவரது மகன் குமரன்( 24).  சில தினங்களுக்கு முன் இவர் தாமலேரிமுத்தூர் பகுதியில் உள்ள ஏரியில் மீன் பிடிக்க வலை விரித்து வைத்திருந்ததாகத் தெரிகிறது. அப்போது கட்டேரி கே.ஆர். எஸ் வட்டம் பகுதியைச் சேர்ந்த பரசுராமன்  மகன் பிரபு என்பவர் மீன் வலையை அறுத்து அதில் இருந்த மீன்களை எடுத்து வந்ததாகக் கூறப்படுகிறது.

இதனைத் தொடர்ந்து மீன் வலை அருந்து உள்ளதைக் கண்ட குமரன் மற்றும் அவரது சகோதரர்கள் சுரஷ் (36) சிங்காரவேலன் (27) மற்றும் உறவினர் முரளி (வயது 33) ஆகிய 4 பேரும் மீன் வலையை ஏன் அறுத்தாய் என்று கேட்டு தகராறு செய்துள்ளனர். தொடர்ந்து இது சம்பந்தமாகப் பிரபுவின் அண்ணன் சத்தியமூர்த்தியிடம் ஊர் பெரியவர்கள் பஞ்சாயத்துப் பேசிக் கொள்ளலாம் உன்னுடைய தம்பியை அழைத்து வா என்று கூறியுள்ளனர்.

இந்நிலையில் நேற்று நடைபெற்ற  ஊர் பஞ்சாயத்திற்குத் தம்பி பிரபு வராத நிலையில் ஆத்திரமடைந்த குமரன் உள்ளிட்ட அவருடைய சகோதரர்கள் மற்றும் உறவினர்கள் சத்தியமூர்த்தி தலை மீது பலமாகத் தாக்கியதில் படுகாயம் அடைந்தவர் மயங்கி விழுந்தார். பின்னர் 108 ஆம்புலன்ஸ் மூலம் மீட்டுத் திருப்பத்தூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காகச் சேர்த்துள்ளனர்.தொடர்ந்து மேல் சிகிச்சைக்காகத் தருமபுரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த சத்தியமூர்த்தி சிகிச்சை பலன் இன்றி இன்று பரிதாபமாக உயிரிழந்தார்.

இது குறித்து சத்தியமூர்த்தி மனைவி பத்மா கொடுத்த புகாரின் பேரில் ஜோலார்பேட்டை  போலீசார் வழக்குப் பதிவு செய்து குமரன் உள்பட 4 பேர் மீது அடிதடி வழக்கை, கொலை வழக்காக மாற்றம் செய்து  குமரன் உள்பட 4 பேரைக் கைது செய்து திருப்பத்தூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். பின்பு வேலூர் மத்தியச் சிறையில் அடைத்தனர்.

சார்ந்த செய்திகள்