சேலத்தில், காதலர்களுடன் வெளியே செல்லும் இளம்பெண்களைக் குறி வைத்து, பாலியல் மற்றும் வழிப்பறி குற்றங்களில் ஈடுபட்டு வந்த நபரை காவல்துறையினர் குண்டர் சட்டத்தில் கைது செய்தனர்.
சேலம் நகரில் வசிக்கும் கல்லூரி மாணவி ஒருவர், கடந்த பத்து நாள்களுக்கு முன்பு தனது காதலனுடன் ஒரே மோட்டார் சைக்கிளில் சென்றுள்ளார். அந்த இளம்பெண்ணைப் பற்றி அறிந்த ஒருவர் அவரை அலைபேசியில் தொடர்பு கொண்டு பேசியுள்ளார். அப்போது அந்த நபர், தான் அந்த மாணவியின் தந்தையின் நெருங்கிய நண்பர் என்று அறிமுகம் செய்து கொண்டுள்ளார். தான் குறிப்பிடும் இடத்திற்கு வருமாறும், அவ்வாறு வராவிட்டால் காதலனுடன் ஊர் சுற்றி வருவதை பெற்றோரிடம் கூறி விடுவேன் என்றும் மிரட்டியுள்ளார். இதனால் கலக்கம் அடைந்த அந்த மாணவி, அலைபேசியில் பேசிய நபர் குறிப்பிட்டபடி சேலம் கந்தம்பட்டிக்குச் சென்றார். அங்கு காரில் தயாராக காத்திருந்த அந்த நபர், மாணவியை பட்டர்பிளை மேம்பாலம் அருகே ஆள்நடமாட்டம் இல்லாத இடத்திற்கு அழைத்துச் சென்றுள்ளார். காரில் வைத்து அந்த மாணவியிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டுள்ளார். பின்னர், அந்த மாணவி அணிந்திருந்த 2 பவுன் சங்கிலியைப் பறித்துக்கொண்டதோடு, நடந்த சம்பவத்தைப் பற்றி வெளியே சொன்னால் கொன்று விடுவதாக மிரட்டி, ஏஎம்எஸ் விடுதி அருகே அவரை காரில் இருந்து இறக்கிவிட்டுச் சென்றுவிட்டார். இதுகுறித்து பாதிக்கப்பட்ட மாணவி கொண்டலாம்பட்டி காவல்நிலையத்தில் புகார் அளித்தார்.
விசாரணையில், மாணவியை காரில் கடத்திச்சென்ற நபர் சேலம் அல்லிக்குட்டை சத்தியமூர்த்தி நகரைச் சேர்ந்த முத்துசாமி மகன் சரவணன் என்கிற ராஜா (45) என்பது தெரிய வந்தது. இதையடுத்து அவரை காவல்துறையினர் கைது செய்து சேலம் மத்திய சிறையில் நீதிமன்றக் காவலில் அடைத்தனர். இது ஒருபுறம் இருக்க, கடந்த ஆண்டு டிச. 18ம் தேதி, ஓமலூரைச் சேர்ந்த ஒரு இளம்பெண் காதலனுடன் ஒரே வாகனத்தில் சென்று வந்ததை நோட்டமிட்ட சரவணன் அந்த இளம்பெண்ணையும் அரசு மருத்துவக்கல்லூரி அருகே ஒதுக்குப்புறமான இடத்திற்கு வரவழைத்திருக்கிறார். அவரிடமும் தவறாக நடக்க முயன்றதோடு, 2 பவுன் நகையையும் பறித்துக்கொண்டு தப்பிச் சென்றிருப்பது தெரிய வந்தது. இவரால் பாதிக்கப்பட்ட மேலும் ஒரு இளம்பெண்ணும், அன்னதானப்பட்டி காவல்நிலையத்தில் அண்மையில் புகார் அளித்துள்ளார். இந்தப் புகார் விசாரணையில் உள்ளது
கடந்த சில ஆண்டுகளாக சரவணன் என்கிற ராஜா, இதேபோல பல இளம்பெண்களிடம் பாலியல் அத்துமீறல் மற்றும் நகை பறிப்பிலும் ஈடுபட்டு வந்திருப்பதும் விசாரணையில் தெரிய வந்துள்ளது. தொடர்ந்து குற்றச்செயல்களில் ஈடுபட்டு வந்ததோடு, பெண்களின் பாதுகாப்புக்கு குந்தகம் விளைவிக்கும் வகையில் செயல்பட்டு வந்த சரவணனை குண்டர் சட்டத்தில் கைது செய்ய காவல்துறை துணை ஆணையர் லாவண்யா, ஆணையர் நஜ்மல் ஹோதாவிடம் பரிந்துரை செய்தார். அதன்பேரில், சரவணன் என்கிற ராஜாவை காவல்துறையினர் குண்டர் சட்டத்தில் கைது செய்தனர். மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ள அவரிடம், குண்டர் சட்ட கைது ஆணை வழங்கப்பட்டது.