வேலூர் மாவட்டம், குடியாத்தம் அடுத்த ஆலாம்பட்டறை பகுதியைச் சேர்ந்தவர் கூலித் தொழில் செய்து வரும் செல்வராஜ் (வயது 30). இன்னும் இவருக்குத் திருமணம் ஆகவில்லை. இந்நிலையில் நவம்பர் 13 ஆம் தேதி மதியம் வீட்டிலிருந்து சென்ற செல்வராஜ், இரவு ஆகியும் வீட்டிற்கு வராத நிலையில் நேற்று குடியாத்தம் - ஒலக்காசி சாலையில் அண்ணாமலை என்பவருக்குச் சொந்தமான விவசாய நிலத்தில் கழுத்து அறுக்கப்பட்டுக் கொலை செய்யப்பட்ட நிலையில் கிடந்தார்.
இதுகுறித்து குடியாத்தம் கிராமிய காவல்துறையினருக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டு சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர், செல்வராஜ் சடலத்தை மீட்டுப் பிரேதப் பரிசோதனைக்காக வேலூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
கொலையாளி குறித்து குடியாத்தம் கிராமிய காவல்துறையினர் விசாரணை நடத்தினர். விசாரணையில், கொலை செய்யப்பட்ட செல்வராஜின் அக்கா மகனான ஜோதிபாஸ்(25), குடியாத்தம் அடுத்த லிங்குன்றம் கிராமத்தில் உள்ள ஒரு ஷூ கம்பெனியில் வேலை செய்து வந்தார். செல்வராஜ் தனது உறவினர் பெண் ஒருவரைக் காதலித்து வந்துள்ளார். அதே பெண்ணை ஜோதிபாஸ் ஒருதலைபட்சமாக காதலித்து வந்துள்ளார். நான் அந்தப் பெண்ணை காதலிக்கிறேன் அந்த பெண்ணோடு பழகாதே என தனது தாய்மாமன் செல்வராஜிடம் ஜோதிபாஸ் கூறியுள்ளார். இந்த விவகாரத்தில் மாமன் மச்சான் இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில் தனது மாமன் செல்வராஜை மது அருந்தலாம் என அழைத்துச் சென்றுள்ளார். இதில், செல்வராஜ், ஜோதிபாசு, 16 வயதுடைய ஒரு சிறுவன், 14 வயதுடைய ஒரு சிறுவன் என நான்கு பேர் சென்று மது அருந்தியுள்ளனர். செல்வராஜுக்கு போதை அதிகமானதும் ஜோதிபாஸ் தன்னிடமிருந்த கத்தியை எடுத்து செல்வராஜ் கழுத்தில் குத்திக் கொலை செய்துள்ளார். அப்பொழுது செல்வராஜ் கத்திக்கொண்டு வலியால் துடித்தபோது அந்த இரண்டு சிறுவர்களும் கைகளையும் கால்களையும் பிடித்துக் கொண்டார்கள் என ஜோதிபாஸ் விசாரணையில் கூறியுள்ளார். தற்பொழுது மூவரையும் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர் போலீசார்.