திமுகவின் மாநிலங்களவை உறுப்பினர் கனிமொழி, தூத்துக்குடி மாவட்டத்தில் கிராமசபை கூட்டங்களில் பேசி வருகிறார். அனைத்துக் கூட்டங்களிலும் கலந்துகொள்ளும் மக்கள், தங்கள் குடுபத்தினருக்கு வேலை வாய்ப்பு இல்லை என்பதை தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர்.
குறிப்பாக, பெண்கள் இதனை அழுத்தமாக முன் வைக்கின்றனர். "ஒவ்வொரு குடும்பத்திலும் குறைந்தபட்சம் வேலையில்லா பட்டதாரி ஒருவராவது இருக்கிறார்கள். வேலையில்லா திண்டாட்டம் தூத்துக்குடியில் தலைவிரித்தாடுகிறது. இதனைப் போக்குவதற்கு நீங்கள் உதவ வேண்டும்" என கோரிக்கை வைத்தபடி இருக்கிறார்கள் குடும்பத் தலைவிகள்.
பெண்களின் வலியுறுத்தலைத் தொடர்ந்து, சில முயாற்சிகளை முன்னெடுத்தார் கனிமொழி. அதன்பொருட்டு, கருணை அறக்கட்டளையும் தூய மரியான்னை கல்லூரியும் இணைந்து பிரமாண்டமான வேலை வாய்ப்பு முகாம் தூய மரியன்னை கல்லூரியில் நடத்தின.
இந்த வேலை வாய்ப்பு முகாமை துவக்கிவைத்தார் கனிமொழி. வேலை வாய்ப்பு முகாமில் டாடா, ராயல் என்ஃபீல்டு, யமாஹா, ஹூண்டாய், நிப்பான் , கொடாக் மகேந்திரா, அசோக் லேலண்டு உள்ளிட்ட 75-க்கும் மேற்பட்ட பிரபல நிருவனங்கள் பங்கெடுத்தன.
தூத்துக்குடி, ராமநாதபுரம், நெல்லை மாவட்டங்களிலிருந்து பெண் பட்டதாரிகள் 4000 பேரும், ஆண் பட்டதாரிகள் 2500 பேரும் என 6500 பட்டதாரிகள் இதில் கலந்துகொண்டனர். இதில் 1300 பெண்களுக்கும் 700 ஆண்களுக்கும் உடனடியாக வேலை வாய்ப்பு கிடைத்தது.
இவர்களுக்கான சம்பளம் 21,500 ரூபாய். வேலைவாய்ப்பைப் பெற்ற அனைத்துப் பட்டதாரிகளுக்கும், வேலை நியமன கடிதத்தை வழங்கினர் கனிமொழி.
கடந்த 2008-2010 ஆகிய 2 ஆண்டுகளில் மட்டும் இதுபோன்று வேலைவாய்ப்பு முகாம்கள் நடத்தி 1,33,958 பட்டதாரிகளுக்கு வேலைவாய்ப்பினை கனிமொழி உருவாக்கித் தந்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.