தொடர் விடுமுறை காரணமாக சொந்த ஊருக்குச் செல்வோர் அதிக அளவில் பேருந்து நிலையங்களில் காத்திருக்கும் நிலையில் ஆம்னி பேருந்து கட்டணங்கள் தாறுமாறாக உயர்ந்துள்ளது.
தொடர் விடுமுறை காரணமாக சொந்த ஊர்களுக்கு மக்கள் படையெடுத்து வருகின்றனர். இந்நிலையில் ஆம்னி பேருந்துகள் பயண கட்டணம் இரண்டிலிருந்து மூன்று மடங்கு வரை உயர்ந்துள்ளது. சென்னை-நாகர்கோவிலுக்கு 4,620 ரூபாயும், சென்னையில் இருந்து நெல்லை வருவதற்கு 4,700 ரூபாயும் கட்டணமாக வசூலிக்கப்படுவதாக புகார் எழுந்துள்ளது. அதேபோல் சென்னையில் இருந்து மதுரை வர 4,710 ரூபாயும், சென்னையில் இருந்து கோவைக்கு 4,510 ரூபாயும், சென்னையில் இருந்து திருச்சி வர 4,600 ரூபாயும் என தாறுமாறாக கட்டணங்கள் உயர்ந்துள்ளது.
இதேபோல் தொடர் விடுமுறையால் உள்நாட்டு விமான கட்டணமும் பல மடங்கு அதிகரித்துள்ளது. சென்னையில் இருந்து மதுரை செல்ல ரூபாய் 3,000 லிருந்த கட்டணம் 19,000 ரூபாயாக அதிகரித்துள்ளது. சென்னையில் இருந்து தூத்துக்குடிக்கு விமான கட்டணம் 18,375 ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது. சென்னையில் இருந்து திருச்சி செல்ல விமான கட்டணம் 21,526 ரூபாயாக அதிகரித்துள்ளது. சென்னையில் இருந்து கோவை செல்வதற்கான கட்டணம் மட்டும் சற்று குறைந்து 7,789 ரூபாயாக இருக்கிறது. ஆம்னி பேருந்து கட்டணங்களை முறைப்படுத்த வேண்டும் என பல்வேறு தரப்புகளிலிருந்து கோரிக்கைகள் எழுந்து வருகிறது.