தமிழகத்தில் நடைபெறும் அரசு விழாவுக்கான அழைப்பிதழ்களில் எதிர்க்கட்சி ஆளுங்கட்சி என்ற பாகுபாடு இல்லாமல் அனைத்து சட்டமன்ற மற்றும் பாராளுமன்ற உறுப்பினர்களின் பெயர்களை பதிவு செய்வது வழக்கமாக இருந்து வருகிறது. இதில் சில இடங்களில் ஆளுங்கட்சியினர் கலந்து கொள்ளும் நிகழ்ச்சிகளில் சில எதிர்க்கட்சி எம்எல்ஏக்களும் கலந்து கொள்வார்கள். சில சமயங்களில் எதிர்க்கட்சி எம்எல்ஏக்கள் கலந்து கொள்ளாமலும் இருப்பார்கள் இதுதான் வழக்கத்தில் இருந்து வருகிறது. இந்த நிலையில் கடலூர் மாவட்டத்தில் நடைபெறும் அரசு விழாவில் திட்டமிட்டு மாவட்டத்தில் உள்ள ஆளும் கட்சி மற்றும் எதிர்க்கட்சி சட்டமன்ற அனைத்து உறுப்பினர்களின் பெயர்களை மட்டும் அழைப்பிதழில் அச்சடிக்க மறுத்துவிட்டதாக எம்எல்ஏக்கள் மற்றும் கட்சியினர் வருத்தத்தில் உள்ளதாக கூறப்படுகிறது.
கடலூர் மாவட்டம் வடலூரில் திருஅருட்பிரகாச வள்ளலார் தெய்வ நிலையத்தில் திருஅருட்பிரகாச வள்ளலார் 202 ஆம் ஆண்டு வருவிக்க உற்ற நாள் விழா அக் 05-ம் தேதி சனிக்கிழமை நடைபெறுகிறது. இதற்கான அழைப்பிதழ் இந்து சமய அறநிலையத்துறை சார்பில் அச்சடிக்கப்பட்டு அரசு அதிகாரிகள் உள்ளிட்ட அனைவருக்கும் வழங்கப்பட்டு வருகிறது.
இந்த அழைப்பிதழில் வேளாண்துறை அமைச்சர் எம் ஆர் கே பன்னீர்செல்வம், இந்து அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு, தொழிலாளர் நலத்துறை அமைச்சர் சி.வே. கணேசன், கடலூர் பாராளுமன்ற உறுப்பினர் விஷ்ணு பிரசாத், சிதம்பரம் பாராளுமன்ற உறுப்பினர் திருமாவளவன், உள்ளிட்ட இந்து சமய அறநிலையத் துறையின் மேல்மட்ட ஊழியர்கள் முதல் அடிமட்ட ஊழியர்களின் பெயர்கள் வரை இடம் பெற்றுள்ளன. மேலும் கடலூர் மாவட்ட பெற்றோர் ஆசிரியர் கழகத்தின் தலைவர் சிவக்குமார் பெயரும் இதில் இடம்பெற்றுள்ளது.
ஆனால் சம்பந்தப்பட்ட சட்டமன்றத் தொகுதியின் சட்டமன்ற உறுப்பினர் பெயரோ மாவட்டத்தில் உள்ள ஆளுங்கட்சி, எதிர்க்கட்சி சட்டமன்ற உறுப்பினர்களின் பெயர்களோ இடம்பெறவில்லை. இந்த அழைப்பிதழை பார்த்து கட்சியினர் திட்டமிட்டு எங்கள் எம்எல்ஏக்கள் பெயர்களை மட்டும் அச்சடிக்காமல் விட்டுவிட்டார்கள் என வேதனை அடைந்து விரக்தியில் உள்ளதாக கட்சியினர் மத்தியில் கூறப்படுகிறது.
மேலும் இது போன்று எம்எல்ஏக்களை அவமானப்படுத்தும் சம்பவங்கள் வருங்காலங்களில் நடைபெறாமல் இருக்க தமிழக முதல்வர் தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்து சட்டமன்ற உறுப்பினர்கள் வேதனை தெரிவித்துள்ளார்கள்.